இந்நுாலில், 50 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அதில், சாண்டில்யன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள், கதை எழுதினால் எப்படி இருக்கும் என்ற பாணியிலான கதைகளும் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியருக்கு, எழுத்துலகில் நட்பு வட்டாரம் அதிகம் என்பதை, தன் ஒவ்வொரு கதைக்கும், ஒரு பிரபலத்திடம் முன்னுரை கேட்டு, அதை பயன்படுத்தியிருக்கிறார். ரா.கி.ரங்கராஜன் முதல், இயக்குனர் ராஜு முருகன் வரை, கதைக்கு முன்னுரை தந்துள்ளனர்.
‘சாவி வார இதழில், எட்டு ஆண்டுகளில், 150 சிறுகதைகள் எழுதியிருப்பேன். நிர்ப்பந்தம் காரணமாக, ‘பார்ம் பில்லர்’ வகையில் எழுதப்பட்டவை’ என ஆசிரியரே, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதால், அதிக எதிர்பார்ப்பு தேவை இல்லாமல் போகிறது.
சரளமான உரைநடை என்பதால், வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. சிறுகதைக்கே உண்டான, கடைசி வாக்கியத்தில் திருப்பம் தருவதிலும், ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார்.
முதல் கதையான, ‘கரிநாக்கு’ சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் சிவராமனை, நாம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கடந்து சென்றிருப்போம்.
அவரின் கணிப்பு பலிக்கும் போதும், பொய்க்கும் போதும், ‘கரிநாக்கு’ என்ற பெயரே சிவராமனுக்கு கிடைக்கிறது.
ஏக்கத்தின் எல்லையில் என்ற கதை, குடிகார தந்தையிடம், மகன் கேட்கும் வரத்தையும்; தேடல் கதை, காணாமல் போன குழந்தை, தன் தந்தையிடம் கேட்டும் கேள்வியையும் மையப்படுத்தி, அழகான வார்த்தை கோலம் போட்டிருக்கிறார் ஆசிரியர்.
‘சூர்யா... ஒரு தரம், ரெண்டு தரம், மூன்று தரம்’ கதைக்கு, முன்னுரை தந்திருக்கும், எழுத்தாளர் திலகவதியே, அதற்கான விமர்சனத்தை, சரியாக செய்திருக்கிறார்.
‘நம்பிக்கைகள்’ கதை, பிரார்த்தனை குறித்த விமர்சனத்தையும், ‘மாடு காத்துக்கொண்டிருக்கிறது’ கதை, கால்நடைகள் உடனான உணர்வையும் பிரதிபலிக்கின்றன.
‘பார்வை ஒன்று, கோணம் வேறு’ என்ற தலைப்புக்கு, நியாயம் சேர்த்திருக்கிறார் அல்லது தன் சிறுகதைக்கு தேர்ந்த தலைப்பை சூட்டியிருக்கிறார்.
சினிமா பட தலைப்புகளை வைத்து எழுதப்பட்ட, ‘நட்சத்திரம்’ சிறுகதை, வாசகருக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. வார்த்தைகளின் வழியே, கதையை தொடர இயலாமல், ‘இது எந்த சினிமா’ என, சிந்தனையை மடைமாற்றி விடுகிறது. சிறுகதையில், இது தேவையில்லாத முயற்சி.
இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை சிறுகதை தொகுதி, இளம் வாசகர் வட்டாரத்திற்கு பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
– சி.கலாதம்பி