முருகன், தமிழ்க் கடவுள் என்பது நாம் அறிந்த செய்தி. அக்கடவுள் பற்றி அறியாத செய்தியையும், அரிதான செய்தியையும் கொண்டு ஆய்வுலகிற்கு பயன்படக்கூடிய வகையில் இந்நுாலை பதிப்பித்திருக்கிறார் சரவணன்.
இதில் அமைந்திருக்கும் மூன்று கட்டுரைகளுமே முக்கனி. ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி காமகோடி சங்கராச்சாரிய சுவாமிகள், நா.வானமாமலை, சா.சரவணன் ஆகியோர் இக்கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
தமிழ் நிலத்திற்கு மட்டும் உரியவனாக முருகனை கொண்டாடும் சூழலில், முருகன் குறித்த பல்வேறு செய்திகளை இந்நுால் முன் வைக்கிறது.
இந்தியா முழுமைக்கும் முருகனே பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வந்திருக்கும் முருகனின் பிறப்பு, பல வேறுபாடுகளை கொண்டது.
முருகனின் பிறப்பு பற்றிய கருத்தியல்கள் வடக்கே ஒரு விதமாகவும், தென்னகத்தே வேறு விதமாகவும் புனையப்பட்டிருப்பதை இதிகாசம், புராணம் வழி கண்டறிந்து மூவரும் கூறி உள்ளனர்.
அறிவியல் கண்கொண்டு சிலவற்றை முருகன் தொடர்பாக ஜகத்குரு ஆராய்ந்துள்ளார். சுவாமி என்றால் அது சுப்பிரமணியரைத் தான் சுட்டும் என்று சொல்லும் அவர், வடக்கே சுப்பிரமணியன் ஒரு பிரம்மச்சாரி.
சுப்பிரமணியர் கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பதில்லை. அங்கு அவன் கார்த்திகேயனாய் விளங்குகிறான். சுப்பிரமணிய அவதாரமே சம்பந்தமூர்த்தி சுவாமிகள் என்று உரைக்கிறார் (பக்., 42).
குமாரில பட்டர் என்பவரும், சுப்பிரமணியரின் அவதாரம் (பக்., 49) என்றும் கருதப்படுகிறது. குமாரில பட்டரும், திருஞானசம்பந்தரும் ஒப்பிடப்படுகின்றனர். ஞான பண்டிதனாகவும், ஞானாக்கினியாகவும் விளங்கும் முருகனின் மகிமைக்கும், லீலைக்கும் முடிவே இல்லை என்ற கருத்தையும் முன்னிறுத்திக் கூறுகிறார் ஜகத்குரு.
இரு பண்பாடுகளின் இணைப்பே முருக வணக்கம் என்ற வானமாமலையின் கட்டுரை யில், முருகனே கிரேக்க நாட்டு டயோனீசாசோடு சில வகைகளில் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
தொன்மை சமய வரலாறும், தமிழ் முருகனும் என்ற சரவணனின் கட்டுரை, பல மேற்கோள்களை கொண்டுள்ளது.
கட்டுரையாசிரியர் எண்ணங்களுக்கு அரண் சேர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. திருமுருகாற்றுப்படை, பரிபாடல் ஆகியன முருகனைப் பற்றிய செய்திகளை கொண்டவை.
தமிழிலக்கியங்களில் தலைமை தெய்வம் பற்றிய நோக்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டு நுால் செய்தவர் நக்கீரர் என்றும், மக்கள் வாழ்க்கைக்கு உரிய தெய்வத்தன்மை பொருட்களையும், தெய்வங்களையும் இணைத்த பாடல்களைக் கொண்டுள்ளது பரிபாடல் என்றும் சுட்டுவது (பக்., 150) கவனத்திற்குரியது.
கால, இட வேறுபாட்டு பின்னணிகளையெல்லாம் இணைத்து தொன்மையும், புதுமையுமாக பெருங்கடவுளாக (பக்., 173) காட்டும் நக்கீரரால், தமிழ் நாகரிக வரலாறு முருகனில் முடித்து வைக்கப்படுகிறது (பக்., 174) என்று முத்தாய்ப்பானதோர் கருத்தை இறுதியில் சுட்டுகிறார்.
இந்நுால் பக்தி நெறியில் உள்ளவர்களுக்கும், முருக பக்தர்களுக்கும் புதிய தகவல்களை கொண்டிருப்பதால், அவர்களிடையே வரவேற்பு பெறும் என்பது திண்ணம்.
– ராம.குருநாதன்