பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 472)
தமிழ் மருத்துவத்தின் வரலாற்றினை ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது அரிய ஆய்வேட்டை நூலாக்கியுள்ளார். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழஞ் சிறப்புமிக்க தமிழ் மருத்துவச் சிறப்பியல்புகள், இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிந்து கிடக்கிறது. தமிழ் மருத்துவத்தின் வரலாறு, தமிழில் மருத்துவ நூல்கள், சித்தர் நெறி, சித்தர்களின் மருத்துவப் பாடல்களின் அருஞ் சிறப்பு என்று நுண்ணிய ஆய்வின் வெளிப்பாடாக ஏராள நுட்பத் தகவல்களை விரித்துரைத்துள்ளார். வாதம், வைத்தியம், யோகம், ஞானம், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் ஆழமான செய்திகளை உலகுக்கு உரைத்த சித்தர்கள் பெரும் புலவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அவர்கள் பாடல்களின் சாரங்களைத் தெள்ளத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது இந்நூல். இத்துறையில் மேலும் ஆய்வு செய்வோருக்குப் பெரிதும் உதவும் வழிகாட்டி நூலாகவும், அறிஞர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் படித்துப் பயன் பெறும் விதமாகவும் அமைந்துள்ள நூல் இது. பின்னிணைப்பாக 20 தலைப்புகளில் ஆசிரியர் தொகுத்தளிக்கும் செய்திகள் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய விஷயச் சுரங்கம் எனலாம்.