‘எதைப் பெற்றாலும் இன்னொன்றைத் தேடுவது மனம்’ என்பர். மனிதர்களின் வாழ்க்கையை இழுத்துச் செல்லும் அற்புதமான இயக்கு சக்தி மனிதர்களின் மனமே என்றால் அது மிகை ஆகாது.
இந்த நுாலில் பத்து கட்டுரைகளின் வழியே மனித மனங்கள் ஆராயப்பட்டுள்ளன. மனவளம் என்பதை மனதின் முதிர்ச்சி எனலாம் என்கிறார் ஆசிரியர்.
அதை மனதின் வலிமை, மனதின் நிம்மதி, மனதின் மகிழ்ச்சி, மனதின் வளர்ச்சி, மனதின் எழுச்சி, மனதின் பசுமை, மனதின் திறன் என, மனவளத்தை வகைமைப்படுத்தி தந்துள்ளார் ஆசிரியர்.
‘நேர்மை, துாய்மை, சத்தியம், உண்மை போன்ற அனைத்தும் மன வளத்தின் முக்கிய அம்சங்கள்’ என்கிறார் மகாத்மா.
பட்டினி கிடக்க வேண்டிய அளவுக்கு வறுமைச் சூழலில் சிக்கித் தவித்த நிலையிலும், மற்றவர்களை மகிழ்வித்து மன நிறைவு கொண்டவர் பாரதி என, பல்வேறு உதாரணங்களை குறிப்பிட்டிருப்பது உள்ளபடியே மிகச் சிறப்பு.
தனி மனித ஒழுக்கம் என்பது மிக மிக முக்கியம். அதில் தவறு நேரும்போது ஒரு சமூக அமைப்பே தள்ளாடிப் போய் விடுகிறது போன்ற செய்திகள், படிக்கும் வாசகனின் மனதை அடுத்தப் பக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.
– முனைவர் க.சங்கர்