ஆசிரியரின் சம காலத்தில் வாழ்ந்த, வாழ்கிற எண்ணற்ற தமிழறிஞர்களைப் பற்றிய பல இனிய காணக் கிடைக்காத தகவல்கள் இந்நுாலில் விரவிக் கிடக்கின்றன. தமிழுக்கு ஓர் அருமையான தன் வரலாற்று நுால் எனலாம்.
உலகத்தமிழ் மாநாட்டில், பேரறிஞர் அண்ணாதுரையால் ரசிக்கப்பட்டு, பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்டு, கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறப்பை (பக்., 17), என்றென்றும் மறக்க முடியாத திருநாள் என்கிறார் கவிக்கோ ஞானச்செல்வன். வைகை அணைக்கு இன்ப சுற்றுலா சென்றபோது, ‘வையை’ எனும் தலைப்பில், 100 வரி அளவில் கவிதைப் போட்டி அறிவிக்கப்பட்டது.
அதில், பன்னிரெண்டு அறிஞர்கள் பங்கேற்க (பக்., 31), எனக்கு முதல் பரிசு கிடைத்தது; மதுரை மாநகருக்கு பெருமை சேர்த்தது போல் அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்தது.
திருச்செங்கோடு கண்ணகி விழாவில், வாகீக கலாநிதி கி.வ.ஜகந்நாதன் தலைமையில், ‘கோவலனுக்கு ஏன் வானுார்தி?’ என்ற தலைப்பில் கவிதை பாடியதும், பேராசிரியர் சத்தியசீலன் நடுவராக இருந்த பட்டிமன்றத்தில் பேசியதும் (பக்., 176), மன்னனென்று நான் பாட மலைத்தேன் என்று உளம் பூரிக்கிறார் ஞானச்செல்வன். இந்நுால், கடந்த கால நினைவலைகளைத் தாங்கிய பொற்பேழையாக பிரகாசிக்கிறது.
– மாசிலா இராஜகுரு