எளிய நடையில் தெளிவான நேரடித்தன்மை கொண்ட, 16 சிறுகதைகளும் இந்நுாலாசிரியரின் கதை சொல்லும் திறனை வெளிப்படுத்துகின்றன. வாழ்க்கைப் பாதையில் காண்பனவும், உணர்வனவும் கதைக்குக் கருப்பொருளாகி இருப்பதை இந்நுால் வெளிப்படுத்தியுள்ளது. ‘தனிமையில் ஒரு கோவில்’ எனும் கதை, கோவிலுக்கு நேர்ந்து கொண்ட ஓர் அனுபவத்தினுாடே மனிதர்களின் மனோபாவங்களைப் படம் பிடிக்கிறது. பேருந்தில் செல்லும் போது நடத்துனர் பாக்கி சில்லரை தராததோடு, அவன் எப்படிப்பட்டவன் என்பதை விளக்கும் கதை, ‘இருளனைத்தும் புலரும்’ என்ற கதை.
இஸ்லாமிய இளைஞன் அப்துல் என்பவனைக் காதலித்து, வீட்டுக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து வாழ்க்கை நடத்தும் வித்யாவின் அண்ணன் மனைவியை மருத்துவமனையில் சேர்த்த அப்துலின் நல்ல மனத்தைக் காட்டும் கதை. தரையில் இறங்கும் விமானம் என்ற கதை, சிவராமன் தன் மனைவி கமலத்திற்கு ஹுமோகுளோபின் குறைந்து விட்டது என்பதற்காக, தன் நண்பரால் அறிமுகப்படுத்தப்பட்ட மாதவன் வீட்டின் முன் இருந்த முருங்கை கீரையை அனுமதி இன்றிப் பறித்துவிட, மாதவனிடம் மன்னிப்பு கேட்கிறார் சிவராமன். அதேசமயம், மாதவனின் பேரன் ஷியாம், பள்ளியிலிருந்து விலக்கப்பட இருந்த சூழ்நிலையில், கமலம் அந்த பையனின் படிப்பு கெடக்கூடாது என்று நினைக்கும் நல்லெண்ணத்தைக் காட்டுகிறது.
இந்நுாலில் இடம்பெற்றுள்ள கதைகள், அனுபவத்தின் பாதையில் இயல்பான கதையோட்டத்தில் இயங்குகின்றன. நிகழ்காலப் பின்னணியில் சமூகத்தில் விளைந்துள்ள மாற்றங்களை, மனிதர்களின் மனநிலையோடு பொருத்திப் பார்க்கிறார் கதாசிரியர்.
– ராம.குருநாதன்