உலக மனித இனத்திற்கே முதல் இனம் தமிழ் இனம். உலக மொழிகளுக்கெல்லாம் முதல் தொன்மையான மொழி நம் தமிழ் மொழி என பெருமைப்பட்டுக் கொண்டாலும், அந்த மொழி வளர்ச்சிக்கு தற்போது கொடுத்துக் கொண்டிருக்கும் வலிமை குறைவே என்றால் அது மிகையாகாது.
தமிழ்ச் சான்றோர்கள் எனும் இந்த நுாலில், 21 தமிழ் அறிஞர்களின் வரலாறும், தமிழ் வளர்க்க அவர்கள் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
மகா வித்வான் மீனாட்சி சுந்தரனார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யர், சிங்கார வேலர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, மறைமலை அடிகளார் போன்றோரின் தமிழ்ப் பணியை, இந்நுாலின் வழி சிறப்பாக அறியலாம்.
இன்னும் பல வரலாற்று தமிழ் அறிஞர்களின் செய்திகளையும் செம்மைப்படுத்தி, தகவல்களுடன் வெளிவந்திருந்தால் சிறப்பாக அமையும்.
– முனைவர் க.சங்கர்