பொதிகை மலையின் புண்ணியச் சாரலில் மதுரையில், 80 ஆண்டு களுக்கு முன் ஸ்ரீபூர்ணானந்தர் அவதரித்தார். ராக்காடி பாபா எனும் ஓம்காரானந்தா சுவாமிகளிடம் தீட்சை பெற்றார்.
பொதிகை மலை வருண குகையில் தவம் செய்தார். ஆந்திராவில் ஸ்ரீசைலம் கண்டிப்பெண்டா ஆசிரமத்தில் பக்தர்களுக்கு நல்வழிகாட்டினார். அவரது வரலாற்றை ஆங்கிலத்தில் இருந்து அழகிய தமிழில் தந்துள்ளார் ஆசிரியர்.
கடந்த, 1938 முதல், 1939 வரை ஓர் ஆண்டு செய்த, ‘புத்ரகாமேஷ்டி’ எனும் காமேசுவரி, காமேசுவர யாகத்தின் பயனாக பூரணானந்த சுவாமிகள் அவதரித்த சம்பவம், மிக அற்புதமாக எழுதப்பட்டுள்ளது.
பொதிகை மலையில் பூர்ணானந்தர் தவம் செய்தார். அங்கு தேனீக்கள் மனிதர்களையும், யானையையும் அழித்துவிடும் அளவில், ‘புல்லட் தேனீ’க்களாக இருந்தன என்ற புதிய செய்தி படிப்போருக்கு வியப்பூட்டும்.
பகவான் நித்யானந்தாவின் தரிசனமும், அருளும் பூர்ணானந்தா பெற்றார். துப்பாக்கியால் சுட்டும் நித்யானந்தரை காயப்படுத்த முடியவில்லை.
பாபாவும், சுவாமி பூர்ணானந்தாவும் பல சித்துக்கள் செய்து காட்டி யுள்ளனர். ராமி ரெட்டி சீடராக வந்ததும் ஆசிரமம் விரிவானது. 1976ல் மகா சிவராத்திரியன்று, 1,000 பேருக்கு சமைத்த உணவு, 4,000 பேருக்கு பரிமாறப்பட்ட அதிசயம் சுவாமிகளின் அருளுக்கு சாட்சியம்.
ராணி என்னும் மானுக்கு மரணத்தின்போது சுவாமிகள் அருள் செய்துள்ளார். திருவள்ளுவர், கொங்கணர், தர்மவியாதர் பற்றிய தவ வலிமைகளை கதைகளாக கூறியுள்ளார் ஆசிரியர்.
நான் வைரங்களை வைத்துள்ளேன். ஆனால், வெறும் கற்களைத் தான் மக்கள் கேட்கின்றனர் என்ற அனுபவ முத்திரையுடன் சுவாமிகள் மறைந்தார். இந்த பொதிகை முனிவரின் வரலாறு மனதைத் துாய்மைப்படுத்தும் திருவாசகம்.
– முனைவர் மா.கி.ரமணன்