மர்லின் மன்றோ என்றதும், பாவாடை காற்றில் பறக்க, ஒரு கையால், அதை தடுத்தபடி, மற்றொரு கையால், பறக்கும் முத்தம் அளிக்கும் தோற்றம், அனைவரின் கண் முன் வந்து போகும்.
ஏழ்மையின் பிடியில், பாலியல் தொல்லைகளில் சிக்கி, ஹாலிவுட்டின் துணை நடிகையாக இருந்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்து, அமெரிக்க அதிபரின் ரகசிய காதலியாக வலம் வந்து, சர்ச்சைக்குரிய மரணத்தை சந்தித்தவர், மர்லின் மன்றோ!
ஒரு சாகச கதைக்குரிய அனைத்து அம்சங்களும், மெர்லின் மன்றோவின் வாழ்க்கையில் உண்டு. அதனால் தான், ஆண்டுதோறும், அவள் பற்றிய புத்தகங்கள், புதிது புதிதாக வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
வழக்கமான, தன் சரளமான உரைநடையில், அங்காங்கே உவமைகளையும் சேர்த்து, கறுப்பு – வெள்ளை பட உலக நாயகிக்கு, வார்த்தைகளால், வண்ணம் பூசியிருக்கிறார், நுால் ஆசிரியர். மெர்லின் வாழ்க்கையை, 18 பாகங்களாக பிடித்து, சுவாரஸ்யம் நிறைத்து தந்திருக்கிறார்.
‘எனக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால், மனிதர்களைப் போல, நாய்கள், என்னை ஒருபோதும் கடிப்பதில்லை’
‘ஹாலிவுட், ஒரு பெண்ணின் முத்தத்திற்கு, 1,000 டாலர்களும்; அவளின் மனதிற்கு, 50 சென்டுகளும் வெகுமதியாக தரும்’ போன்ற, மர்லினின் தத்துவங்கள், நுாலில் இடம்பெற்றிருப்பது சிறப்பு.
அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியுடன், மெர்லினுக்கு பழக்கம் ஏற்பட்டபின், அவளது வாழ்க்கை, சி.ஐ.ஏ.,வில், சந்தேக சிலந்தி வலையால், பின்னப்பட்டிருந்தது.
மெர்லினால், அரசு ரகசியங்கள் வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது என, கருதியது. மெர்லினின் மரணத்திற்கு பின், அவளது லாஸ் ஏஞ்சலஸ் இல்லத்தின் சுவர்களில், வகைதொகையே இல்லாத அளவிற்கு, ஒயர்கள் பின்னப்பட்டிருந்தன.
மெர்லின் மரணம், திட்டமிடப்பட்ட கொலையா, விரதியின் உச்சத்தில் எடுக்கப்பட்ட தற்கொலை முடிவா என, விடை தெரியாத கேள்வி இருக்கும் வரை, மெர்லின் சுவாரஸ்யமான புதிர் கதையாக, எப்போதும் இருந்துகொண்டே இருப்பாள் என்பதை, இப்புத்தகமும் வெளிச்சமிட்டு காட்டுகிறது.
– சி.கலாதம்பி