சித்தாந்தம் ஜூலை – ஆகஸ்ட், 2018 இதழில் வெளியான கட்டுரைகளை அப்படியே மேலட்டையை மாற்றி, ஆதின வெளியீடாக வந்துள்ளது.
இதில், க.வெள்ளைவாரணன் எழுதிய பழைய கட்டுரைகளோடு, மவுன குமாரசாமித் தம்பிரான், சி. அருணைவடிவேல், பி.ஏ.நடராஜன் போன்றோர் வெளியிட்டுள்ள திருவாசக உரைநுால்களுக்கு எழுதிய பழைய முகவுரைகளும் சேர்க்கப்பட்டு உள்ளன.
திருப்பெருந்துறையும் ஆவுடையார் கோவிலும் ஒன்றா, அதை யார் கட்டினர் போன்ற புதிய கட்டுரைகளும் இதில் வலிந்து சேர்க்கப்பட்டுள்ளன. திருக்கோவிலில் மாணிக்கவாசகருக்கு ஏன் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
மாணிக்கவாசகரை பிரதிஷ்டை செய்ய அசரீரி ஏன் சொன்னது? (பக்., 4) இப்படி ஏற்கனவே வெளிவந்த முகவுரைகளுக்குக் குறுக்குக் கேள்வி களைக் கேட்கும் இன்றைய சைவ சித்தார்ந்தப் பெருமன்றத்தலைவரான தொகுப்பாசிரியர், ‘அனுமானக் கருதுகோளாக முன் வைக்கலாம்’ (பக்., 94) என்ற கருத்தை வழிமொழிவதன் மூலம் ஏற்கனவே சர்ச்சைக்குள்ளான பத்மாவதி யின், ‘மாணிக்கவாசக ரின் காலமும் – கருத்தும்’ நுாலுக்கு சப்பை கட்டுவது போலுள்ளது, சைவத்திற்குப் புறம்பான செயலாகும்.
இதில், உ.வே.சா., கே.ஜி.சேஷையர், மறைமலை அடிகள் முதல் அண்மையில் வந்துள்ள சு.வேலாயுதனின், ‘மாணிக்கவாசகரின் கால ஆய்வுகள்’ (2018) வரை தொகுக்காதது அவரது தகுதிக்கு இழுக்கே.
வேல்ஸ் இளவரசருக்குக் கவிதை பாடிய பாரதி, வீரபாண்டியகட்டபொம்மனைப் பாடவில்லை என்பதாலேயே முன்பின் ஆகிவிடுமா? சிவ லிங்கத் திருமேனியில் பீடம் ஆவுயைவிந்து, இலிங்கம், நாதம் என்று சாத்திரம் கூறும் அ+உ+ம்=ஓம்; விந்து பக்கத்தில் நாதவடிவை இட்டு எழுதுதல் பிள்ளையார் சுழி (ஆவுடை) ஆயிற்று (குன்றக்குடி அடிகளார்) என்றதையும் உயிர்களைக் கரையேற்றுவதால் கோயில் உள்ள ஊர்களின் பெயரோடு, ‘துறை’ என்பதை சேர்த்தனர் (யு.சுப்ரமணியம் இ.ஆ.ப.ஓ.,) என்றதையும் ஒருபற்றும் அற்று அருவாய்த் தானே நிற்கும் தத்துவங் கடந்தபொருள் என்னும் ஆன்ம, வித்யா, சிவ தத்துவங்கள் பற்றி இன்றைய கல்வெட்டு ஆய்வாளர்கள் அறிய வாய்ப்பில்லை.
இந்த ஆன்மாவில் உயர்ந்த ஆன்மலிங்கத்தைக் காண இயலாத இத்தொகுப்பாளர், ஆவணங்கள், நாணயங்கள், செப்பேடுகள், அகழ் ஆய்வுகள், கட்டடக்கலை, இலக்கியங்கள், கல்வெட்டுகள் யாவுமே வரலாற்று ஆய்வுக்கு உகந்தவை என்பதை அறிந்தும், ஒரு தலைபட்சமாகச் செயல்பட்டுள்ளார்.
உலகியல் வழக்கு, செய்யுளியல், சமயவியல், வழக்கில் உள்ள நீண்டகால மரபை கொச்சைப்படுத்தி சைவத்தை மேலும் பிளவுபடுத்தாமல் வளப்படுத்த முயற்சிப்பதே இன்றை சேவையும், தேவையுமாகும்.
– பின்னலுாரன்