ராமானுஜரின் எண்ணங்கள் சம காலச் சிந்தனைக்கு மிகவும் பொருந்தி வரும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது இந்நாடகம். வைணவ நெறியைப் பாமரரும் அறியும் வண்ணம் அச்சமயத்தின்பால் மக்களைத் திருப்பியதில் ராமானுஜரின் பங்கு குறிப்பிடத்தக்து.
அவர் வாழ்ந்த காலத்தில் அவரது அணுகுமுறை ஏழை எளியவரையும் சென்றடைந்தது. ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாடப்பட்ட தருணத்தில் இந்நாடகம், இரண்டாவது பதிப்பாக வந்தாலும், இந்திரா பார்த்தசாரதியின் நாடக ஆக்கம், படிக்கத் துாண்டும் விதத்திலும், ராமானுஜரின் பணியைப் போற்றும் விதத்திலும் அமைந்துள்ளது.
ராமானுஜரின் வாழ்க்கையை இந்திரா பார்த்தசாரதிக்குப் பின் இலக்கியப் படைப்பாக கொண்டு வந்தவர்களில், கவிஞர் வாலியும், கவிஞர் சிற்பியும் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.
இந்நாடகம், ராமானுஜரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. மக்களோடு ஒன்றாக இணைந்து அதைச் செயற்படுத்திய விதம் இந்நாடகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பிறப்பாலும், ஜாதியினாலும் மக்களிடையே உருவாகியிருந்த உயர்வு தாழ்வு மனப்பான்மையைத் தகர்ந்து, வைணவம் அனைவருக்கும் உரித்தானது என்ற கருத்தை நிலைநாட்டும் படியாக இந்நாடகம் உருவாகியுள்ளது.
பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான நிலை அளித்து அவர்களையும் சீடர்களாக ஏற்றுக் கொண்டதை நாடகப் பாத்திரங்கள் வழி அறியலாம். அனைவருக்கும் சமநீதி இது என் வைணவத்தின் உயிர்நாடி என் துறவிலே மனித உறவைக் காண்பேன் என்று தன் மனைவி தஞ்சம்மாவிடம் சொல்லி இல்லறத்தை அவர் துறப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. வன்மையான உரையாடல்கள் நாடகத்திற்கு உரம் சேர்க்கின்றன. அரங்க அமைப்பும், நாடகச் சூழலை உணர்ந்து கொள்ளும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளன.
– ராமகுருநாதன்