இந்நுாலின் அணிந்துரையில் எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி குறிப்பிட்டிருப்பதை போல, நேரில் பார்க்க ஒரு மாதத்திற்கு முன்பே தேதி வாங்க வேண்டிய பிரபல டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன், இந்த புத்தகம் மூலம் உங்கள் வீட்டிற்கு வருகிறார்.
புத்தகத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு, சாமானியருக்கும் புரியும் விதத்தில், எளிய தமிழில் அழகான உதாரணங்களோடு, குட்டி படங்களையும் காட்டி விவரிக்கிறார். பெயரில் இனிப்பை வைத்திருக்கும், ‘சர்க்கரை’ நோய், வாழ்க்கையையே கசப்பாக்கி விடும் என்று எச்சரிக்கிறார்.
சர்க்கரை நோய் வெறும் உணவு விதிமுறைகளையும், தவறாமல் மாத்திரைகள் சாப்பிடுவதையும் பற்றியது அல்ல என்பதை இந்த புத்தகத்தின் மூலம் உணர முடிகிறது.
இந்த நோய் நம்மை தாக்க வந்த வழிப்பறி கொள்ளையன், கொலையாளி எனக் குறிப்பிட்டு, நோயின் கொடூரத்தை நுாலாசிரியர் கோடிட்டு காட்டினாலும், இதை எதிர்கொள்ள எளிய வாழ்வு மந்திரங்களையும், உணவு தந்திரங்களையும் தருகிறார்.
சர்க்கரை நோயில் இத்தனை வகைகளா? அத்தனையும் நாம் அறிவது அவசியமே. நுாலில், 34 தலைப்புகளில் உள்ள கட்டுரைகளை படித்து முடித்த பின், இரண்டு விஷயங்கள் நடக்கும்.
ஒன்று: இந்த நோய் வந்தவர்களுக்கு அதை எதிர்கொள்ளும் மன தைரியம் கிடைக்கும்.
இரண்டு: நோய் இல்லாதவர்களுக்கு, இனிமேல் வராதவாறு முன்னேற்பாடு செய்துகொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். இதுவே இந்நுாலின் வெற்றி.
– ஜி.வி.ஆர்.,