உயிர்ப் பொருட்கள் பற்றியும், ஜடப் பொருட்கள் பற்றி யும் ஓயாமல் ஆராய்ந்து கொண்டிருக்கும்
மனிதன், முதலில் தன்னை முழுமையாக ஆய்ந்து உணர வேண்டும். நிரூபிக்கப்பட்ட சமன்பாடுகளாலும், ஊகங்களாலும் அறிவியல் துறைகளின் வாயிலாக உண்மைகளின் தேடல்களிலேயே திரியும் மனிதன், முழுமையாக மனித இயல்புகளை ஆய்ந்தறிவது அத்தனை எளிதல்ல.
மனிதனின் அறிவுடைமை மகத்தானது என்பதைப் போலவே அறியாமையும், அதை விட பன்மடங்கு மகத்தானது. மனிதனின் ஒவ்வொரு அம்சமும் கவனிக்கப்பட வேண்டியதோடு, அவை அனைத்தும் விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கிறார் நுாலாசிரியர், அலெக்சிஸ் காரெல்.
மனிதனை ஆய்வதற்கு உடல் ஆன்மா மீதான உயிரியல் ஆய்வை வளர்க்க வேண்டும் என்று கூறி, அதில் உள்ள செயல்முறை சங்கடங்களையும் விளக்குகிறார்.
மனிதன் புற உலகை வெல்லாமல், தன் முழுமையான ஆற்றல்களை துல்லியமாக விரைந்து அறிவதற்குச் சாத்தியமில்லை. மானுடத்தைப் பெருமளவு செழுமையாக்கிய பவுதிக வியல், வேதியியல், பொறியியல், வானவியல் போல, மனிதவியலில் பேராய்வு நிகழாமைக்கு மனித மனதின் சிக்கலான அமைப்பே காரணி என்கிறார்.
உடல் மற்றும் மன இயக்கங்களின் மீது அறிவியல் ரீதியாக ஊடிய செறிந்த சிந்தனைகளின் அரிய தொகுப்பாக அமைந்த இந்நுாலை, வாசிப்புக்கேற்ற எளிய தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார் நடராசன்.
– மெய்ஞானி பிரபாகரபாபு