‘மூளைக்குள் சுற்றுலா’ என தலைப்பிட்டு, நம் மூளையின் மூலை முடுக்குக்கெல்லாம் செல்ல வைத்து விட்டார், நுாலாசிரியர்.
சிம்பன்சியை விட, மூன்று மடங்கு மூளை, நமக்கு அதிகம் என்பதில் துவங்கி, புராணம், கடவுள், மதங்கள் தோன்றியதன் காரணத்தை விளக்குகிறார். உலகச் சண்டைகள் ஏன் உருவாகுகின்றன என்பதற்கு, இதுவரை யாரும் சொல்லாத, அழகான விளக்கமும் வேறு.
‘ஹைட்ரா’ விலங்கின் தலையை வெட்டினால், இரண்டு தலைகள் முளைக்கின்றன. அதற்கும், ஜெல்லி மீனுக்கும் உள்ள விசேஷம், முதுகெலும்புள்ள பிராணிகள் பற்றிய விளக்கம், நாம் வெட்கப்பட்டால், மூளையில் தோன்றும் மாற்றம் குறித்து விவரிக்கிறார்.
மூளை வளர நீண்ட காலமாவது ஏன், நமக்குரிய மிகப் பெரிய வரப்பிரசாதமான மறதி எப்படி ஏற்படுகிறது, தண்டுவடத்தின் பயன், பல்பு எரிய வைக்கும் திறன் பெற்ற மூளை, மக்கு பிளாஸ்திரிகள், சூப்பர் பிரில்லியன்ட் குழந்தைகள் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஏன் சிகரெட் புகைக்கிறோம், ஆண் – பெண் சமன்பாடு, நமக்கு என்ன தேவை என்பதை, மூளை எப்படி கட்டளை இடுகிறது, மனித நிற, இன பேதத்தை நமக்குள் ஏன் உருவாக்கிக் கொள்கிறோம் என்பதையெல்லாம், மருத்துவ ரீதியாக ஆராய்ந்து, தெளிந்த கருத்துக்களுடன், மிக அழகாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.
ஒவ்வொரு வாக்கியத்திலும், ஒவ்வொரு தகவல். இந்த பிரமாண்ட புத்தகத்தில் உள்ள கருத்துக்களை நினைவில் வைத்துக் கொள்ளவே, தனி மூளை வேண்டும். மருத்துவர்களே வியந்து போற்றக் கூடிய வகையில், முழு ஆராய்ச்சி செய்து வெளியிடப்பட்டுள்ள நுால் இது.
– பா.பானுமதி