தமிழ் இலக்கியத்தைப் பாரதி புதுமைப்படுத்தினார். இவருக்குப் பின் வந்த பாரதிதாசன் புதுமைத் தமிழைப் பொதுமைப்படுத்தினார்.
பாவேந்தரின் பாடல்களில் சமூக சீர்திருத்தம் எரிமலையாக ஒளிரும். அதன் வெப்பத்தையும், ஒளியையும் இந்நுாலாசிரியர் ஆய்வு செய்து, 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட ஆய்வேடு நுாலாக, வடிவம் பெற்றுள்ளது.
‘கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா’ எனும் குறுங்காவியங்களை விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளார். கண்ணகி, மணிமேகலை பாத்திரப் படைப்புகளை, சமூக நீதியுடன் ஒப்பிட்டு பல உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.
கதைப் பாடல்கள் உருவான களங்கள், பெண் பாத்திரப் படைப்புகள், உருவகப் பாத்திரப் படைப்புகள், ஒன்று மற்றொன்றாய் மாறிவிடும் பாட வேறுபாடுகள், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி, குடும்ப விளக்கு, எது பழிப்பு போன்ற, 14 கதைப் பாடல்களின் போக்கு பற்றிய செய்திகள் விரிவாக ஆய்ந்து எழுதப்பட்டுள்ளன.
புரட்சிக் கவிக்கும், வில்ஹணீயத்திற்கும் இடையே உள்ள, 10 ஒற்றுமை வேற்றுமைகளைப் பட்டியலிட்டுள்ளார். குமரகுருபரர் பிரபந்தங்களில் பாவேந்தருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.
எதிர்பாராத முத்தக் கதைப் பாடலின் இரண்டாம் பகுதியில் வரும் குமரகுருபர் கதையை ஆய்வு செய்கிறார். மயக்கும் தமிழை, ‘துய்ய நற்றமிழ்ச் சாராயம், துய்த்திடக் காத்திருந்தார்’ என்று பாடுகிறார். இவரே தமிழை அமுதமாகவும் பாடியுள்ளார்.
‘குறள் ஓவியம் குடும்ப விளக்கு’ என்று முன்னுரையில் பாவேந்தர் குறிப்பிடுகிறார். பாவேந்தரை ஆழமும் அகலமும் காட்டும் முப்பரிமாண ஆய்வு நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்.