நாட்டுப்புறப் பாடல்களின் சுவையோடு, சந்த நயத்தோடு இக்கவிதை நுால் வெளிவந்து உள்ளது.
இதில் அமைந்துள்ள கவிதைகளில் பெரும்பகுதி 1978 – 79ம் ஆண்டுகளில் உருவானவை என்பதை நுாலாசிரியர் முன்னுரையால் மட்டுமன்றி, கவிதையின் பாடுபொருள் கொண்டும் உணர முடிகிறது.
பட்டுக்கோட்டையாரின், ‘வீரர் மரபு வாழ்க!’ எனும் கவிதையை முன்வைத்து, தன் வளர்ப்புத் தாயான பார்வதியை தமிழ்த்தாயாக பாவித்து முதல் வணக்கம் கூறி நுாலைத் துவங்குகிறார். ‘மீண்டும் ஒரு சுதந்திரம் வேண்டும்’ எனும் உரிமை முழக்கக் கவிதையோடு இந்த நுால் முடிகிறது.
காதல், குடும்பநலம், நாட்டு நலம், நாட்டின் எதிர்காலம் - இளைய சமுதாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் நலம் காத்தல் முதலியன கவிதைகளின் பாடுபொருள்களாக அமைந்துள்ளன.
கவிதைகள் இனிய எளிய நடையில் அமைந்து இன்பம் பயக்கின்றன. சான்றாக, ‘பெண்ணுக்கு வளர்ப்பகம் பிறந்தகம் - துணை...
பெற்றபின்னே புகுவது புக்ககம்; பெண்ணடிமை செய்ய நினைத்தால் - அவளோ வெடிகுண்டாய் மாறும் கந்தகம்’ என்னும் வரிகள், தமிழ்க் கவிதையின் சாயலுடன் இனிமை சேர்ப்பதையும் காணலாம்.
குடியின் தீமை, குடும்பக்கட்டுப்பாட்டின் அவசியம், என்பதுடன், ‘பட்டுக்கோட்டையாரின் பாதையிலே…’ எனும் தலைப்பு இனிதாக அமைந்து, பொருத்தம் உடையனவாய் இன்பம் பயக்கின்றன. தமிழ்த்தாய் இதை மகிழ்வோடு ஏற்பாள் என்பதில் ஐயமில்லை.
–இரா. பன்னிருகை வடிவேலன்