டாக்டர் உ.வே.சா., 1939ல் வெளியிட்ட இந்தநுால், 80 ஆண்டுகளுக்குப் பின், தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தணியின் அழகையும், சிறப்பையும், எங்கும் எழுந்தருளியுள்ள முருகனின் பெருமைகளையும், மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புகளையும் வெகு விளக்கமாகக் கூறும் இந்நுாலின் கவிச்சுவை சொல்லி மாளாது. உ.வே.சா., முகவுரையே கந்தப்பையரின் புலமையை வெகுவாக பாராட்டியுள்ளது, இப்புராணத்தைப் படிக்கும் ஆவலைத் துாண்டுகிறது.
இப்புராணத்துடன் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் இயற்றிய திருத்தணிகைத் திருவித்தமும், உ.வே.சா., எழுதிய குறிப்புரையும் இணைக்கப்பட்டுள்ளது.
‘தினமலர்’ ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் கணினியில் உள்ளீடு செய்து உதவியதன் மூலம் வரும் இந்நுால், பழந்தமிழ் நுால்கள் பழுதுபடாமல் பாதுகாத்துப் பயன் பெற உதவ வேண்டும் என்ற, உ.வே.சா., முயற்சிக்கு உரமூட்டுவதாகும். அரிய நுால், படிக்கப் படிக்கப் பக்திப் பரவசமூட்டும் அருங்கவிப் படைப்பு இது.
– பின்னலுாரான்