இன்றைய காலச் சூழலில் மனிதனுக்கு அனைத்து நிலைகளிலும் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. அறிவியல், தொழில்நுட்பம் எத்தனை சிறந்து விளங்கினாலும், மனிதனுக்கு மனிதன் அன்பு செலுத்துவதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. இது தான் வாழ்க்கை நெறி என்று உணர்ந்த மகான்கள் பலர் உலகில் தோன்றினர்.
இறைவன் வகுத்த பாதையில் மக்களைப் பயணிக்கச் செய்யும் பணியையே திருத்தந்தையர் மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய பண்பாட்டுப் பாதையில் இன்று, அனைத்துலக கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் ஆன்மிகத் தலைவராக விளங்குபவர் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரான்சிஸ் எளிமையும், மனிதநேயமும் கொண்ட தலை சிறந்த இறை ஊழியராகத் திகழ்ந்தவர். இறைவனின் அன்பு நெறியில் வாழ்ந்து, அயராத பணியின் மூலம் மனித சமுதாயத்திற்கு திருத்தந்தையானவர்.
அவர் குறித்தான விபரங்களையும், திருச்சபையின் துவக்க காலத்திலிருந்து பிரமாண்டம், ஆடம்பரம், சடங்கு, சம்பிரதாயங்களையும், உலக அமைதி, ஒற்றுமை, உறவுகளில் காட்ட வேண்டிய புனிதம், தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு என்று, பல கோணங்களில் மக்கள் பாகுபடுத்தப்படுவதை எண்ணி வருந்தினர்.
அதில் மாற்றம் வர வேண்டும் என்று அயராது உழைக்கும் குணம் பற்றிய விபரங்களையும், செயல்பாடுகளையும் அழகாகத் தொகுத்து, ‘மனிதனைத் தேடும் மாமனிதர்’ என்று தந்திருக்கிறார் மதுரை இளங்கவின்.
திருச்சபை நிறுவனத் திருச்சபையாக இல்லாமல், மக்களின் திருச்சபையாகத் திகழ வேண்டுமென்று இவர் கூறி வரும் வழிமுறைகள், தவறாமல் பின்பற்ற வேண்டியவை.
மனிதத்தை, மனித நேயத்தை விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
– ஸ்ரீநிவாஸ் பிரபு