சோழ வரலாற்றில் மாபெரும் வீரனாக, தவிர்க்க முடியாத ஓர் தலைவனாகக் கருதப்படுபவர் ஆதித்த கரிகாலன். இவனின் தம்பி தான் அருண்மொழி என்னும் ராஜராஜன்.
சோழப் பேரரசை ஆதித்த கரிகாலன் ஐந்து ஆண்டுகள் தான் ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்குள்ளாகவே எவரும் தொட முடியாத சாதனைகளை எல்லாம், சாதாரணமாகத் தொட்டுச் சென்றது இவரின் பெருஞ்சிறப்பு. அவர் காலத்தில் அவருக்கு நிகரான வீரனே கிடையாது என்பதைச் சொல்வதாக இருக்கிறது. மாவீரனான ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட விபரத்தை, ‘விண்ணுலகைக் காணும் ஆசையில் மண்ணுலகை விட்டு நீங்கினான் ஆதித்தன்’ என்று உடையார்குடி கல்வெட்டும், சோழர் கால செப்பேடும் குறிப்பிடுகிறது.
ஆதித்த கரிகாலன் ஏன் கொல்லப்பட வேண்டும் என்ற கேள்விகளின் அடிப்படையில் எழுந்திருக்கிறது இந்தப் புதினம். ஓர் மாவீரனின் வாழ்வியலை முன்வைத்து கற்பனையோடு பயணிக்கிறது நாவல்.
இது நாவலின் இரண்டாம் பாகம். ஆதித்த கரிகாலனில் ஆட்சியில் துவங்கி, உத்தம சோழர் அருண்மொழி வர்மரின் ஆட்சி துவக்கம் வரை நீள்கிறது நாவல். அது அத்தியாயம் 32ல் துவங்கி, அத்தியாயம் 67 வரை நகர்வது, தொடர்கதை படிக்கும் மனநிலையையே தருகிறது.
ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் யார் என்பதற்கான துருப்பு, கல்வெட்டுகளின் மூலமாக கிடைக்கிறது. கொலை நடந்தது எப்படி? கொலையாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்பதை இன்னொரு புதினத்தில் காண்போம் என்கிறார் ஆசிரியர்.
– ஸ்ரீநிவாஸ் பிரபு