சேக்கிழார் படைத்த பெரிய புராணம், சுந்தரர் வாழ்க்கையுடன் தொடங்கி, சுந்தரர் வாழ்க்கையுடனே நிறைவடைகிறது. திருக்கயிலாயத்திற்குச் சுந்தரர் வருகிற காட்சியைக் கண்டதும், உபமன்னிய முனிவர் எழுந்து நின்று வணங்குகிறார்.
சிவபெருமானை மட்டுமே வணங்கும் உபமன்னிய முனிவர், இவரைக் கண்டதும் எழுந்து நின்று வணங்குகிறாரே என்று, அவரது சீடர்கள் கேட்கின்றனர். அவர்களிடம், இவர் தான் சுந்தரர். சிவபெருமானின் மறுவடிவம் தான் சுந்தரர்.
அடியார்கள் அந்தச் சுந்தரரின் வரலாற்றை கேட்கின்றனர். அவர்களுக்கு அந்த வரலாற்றை கூறுவது போல் சேக்கிழார் பெரிய புராணத்தைப் படைத்துள்ளார்.
தமிழ் மொழியில், முதன் முதலில், முழுவதும் பின்னோக்கு உத்தியில் படைக்கப்பட்ட நுால், பெரிய புராணம். அந்தப் பெரிய புராணத்தில் சுந்தரரின் வாழ்க்கைப் பகுதிகளை மட்டும் தனியே நுாலாக எளிய நடையில் படைத்திருப்பது சிறப்பு.
அந்தணர் குலத்தைச் சேர்ந்த சுந்தரர், அந்தணர் குலத்தில் தோன்றிய பெண்ணைத் திருமணம் செய்யும்போது, சிவபெருமான் தடுத்து ஆட்கொள்கிறார்.
ஆனால், அந்தணர் குலம் அல்லாத, வேறு குலத்துப் பெண்கள் இருவரை, சிவபெருமானே திருமணம் செய்து வைக்கிறான் என்றால், மனிதர்கள் எல்லாரையும் ஒன்றாகக் கருத வேண்டும் என்னும், உயர்ந்த நோக்கத்தை, சிவபெருமான் உணர்த்துகிறான் என்பது நல்ல தகவல்.
மொத்தத்தில், பெரிய புராணச் சுருக்கம் போலவே இந்த நுால் படைக்கப்பட்டுள்ளது.
– முகிலை இராசபாண்டியன்