‘இந்த, 50 ஆண்டுகளில் இயற்கையோடு வாழ்ந்த காலம் போய், இயற்கையை விற்கத் துவங்கிவிட்ட காலமாக மாறி, நதி என்றாலே வறண்ட நிலமாகவும், லாரிகள் நிற்கும் இடமாகவும் மாறிவிட்டது’ என, வருந்துகிறார் நுாலாசிரியர்.
ஒரு லாரி மணல், 40 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதையும், நீதிமன்ற உத்தரவுகளை உதாசீனப்படுத்தி, அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், லாரி உரிமையாளர்களும் அடிக்கும் கொள்ளைகளையும் ஆதாரங்களோடு பட்டியலிட்டுள்ளார்.
‘மணலில் இருந்து, எம்.சாண்டுக்கு மாறுவதற்கான தன்னம்பிக்கையை மக்களுக்கு வழங்க அரசு தயாராக இல்லை’ (பக்., 65).
கடந்த, 2016ல் பிடிபட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டி, ‘தன் வீட்டில் இருந்த, 170 கோடி ரூபாயில், 34 கோடி ரூபாய், மணல் குவாரியில் இருந்து கிடைத்த ஒரு நாள் வருமானம்’ என, நீதிமன்றத்தில் ஒப்புதல் கொடுத்துள்ளார் (பக்., 67).
ஒரு நாளைக்கு, 8,300 லாரிகள் மட்டுமே மணல் வெட்டி எடுக்கப்படுவதாக ஆட்சியாளர்கள் கணக்கு காட்டுகின்றனர். ஆனால், ஒரு லட்சம் மணல் லாரிகள் உள்ளன (பக்., 69).
கொள்ளையடிக்க அனுமதித்து, அதற்கான பங்கை அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், மணல் கொள்ளையர்களும் செய்யும் நுாதன முறைகேடுகளை, பல ஆதாரத்தோடு விளக்கும் விழிப்புணர்வு நுால் இது.