அன்புக்குரிய துணைவர் அறிஞர் அறவாணனுக்கு இந்த நுாலை காணிக்கையாக்கி, பெருமை சேர்த்திருக்கிறார் ஆசிரியர் தாயம்மாள், தமிழகத்தில், பல அவ்வையார்கள் விட்டு சென்ற அறநுால் பதிவுகள் அனைத்திற்கும் விளக்கமாக இந்த நுாலை எழுதியிருக்கிறார். அவ்வை என்ற சொல் வயதில் மூத்தவள், தமக்கை, பெண் துறவி ஆகியவற்றை குறிக்க வழங்குகிறது.
சங்க கால அவ்வை தொடங்கி, பல அவ்வையார் வாழ்ந்திருக்கலாம் என்பதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். காதல் பாடல்களை அவ்வை பாடியதாக குறிக்கும் ஆசிரியர் அவரை, ‘பெண் துறவி’ என்று அழைக்கலாமா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். அவ்வையாரின் தனிப்பாடல்கள் ஏராளம். அவற்றை இந்த நுாலில் கண்டு பலரும் மகிழலாம்.
அவ்வையார், ‘ஆறுவது சினம்’ என்றால், ‘சீறுவோர் சீறு’ என்ற பாரதியார் கருத்தும், பல்வேறு புதிய ஆத்திசூடிகள் எழுந்ததையும் முழுவதுமாக விளக்கியிருக்கிறார்.
பதினெட்டாம் நுாற்றாண்டில் தமிழை ஆய்ந்த கிறிஸ்துவ அறிஞர்கள், கி.பி., 1864ல் சிறுவர் கல்விப்புதையல் உருவாக்கியதையும், அதில் எந்த அளவு அவ்வையார் கருத்துகளை மாற்றி உள்ளனர் என்பதையும் காட்டுகிறது.
உதாரணமாக, ‘தாயிற்சிறந்ததொரு கோயிலுமில்லை’ என்பது கொன்றை வேந்தன் கருத்து. ‘தாய் சொல் துறந்தால் வாசகமில்’ என்று மாற்றியது உட்பட பல கருத்துகள், வரலாறு எப்படி பலவற்றை மாற்றி விட்டன எனக் காட்டியவிதம் சிறப்புக்குரியது.
இருபத்தி ஐந்து நுால்கள் எழுதிய ஆசிரியர், அவ்வையார் பற்றி பல கோணங்களில் இந்த நுாலை எழுதியிருப்பது சிறப்பாகும்.