ஆங்கிலேயர் ஆட்சியில், தமிழ்நாடு என்னும் முதல் பாகத்தில் ஆர்க்காடு நவாபின் ஆட்சி, 1710ல் துவங்கி, 1962ல், புதுச்சேரி பிரெஞ்சு பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது வரை, 14 தலைப்புகளில் அமைந்துள்ளது.
விடுதலைக்குப் பின், தமிழகம் என்னும் இரண்டாம் பாகத்தில் தமிழக – ஆந்திர எல்லைப் பிரச்னை துவங்கி, 2018ல் காவிரி நதி நீர் நடுவம் அளித்த தீர்ப்பு வரை, எல்லாவற்றையும் விபரமாக எடுத்தாளப்பட்டு உள்ளது.
பிற அரசியல் கட்சிகள், காவிரி ஆற்று நீர்ச்சிக்கல், தமிழ்நாடும் தமிழ் ஈழமும், நிர்வாகமும் சமுதாயமும், தமிழகத் தலைவர்கள் என்ற பொதுத் தலைப்புகளில், சுருக்கமான அரசியல் வரலாற்றையும் நுாலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
கடந்த, 1801ல் சென்னை மாநிலம், எட்வர்டு கிளைவ் பிரகடனத்தால் உருவானது (பக்., 34). 1841ல் சென்னையில் துவங்கப்பட்ட அரசுப் பள்ளி, மாநிலக் கல்லுாரியாக உயர்த்தப்பட்டது (பக்., 104). 1939, ஜூலை, 8ல், அனைத்து ஜாதியினரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடும் உரிமை பெற்றனர் (பக்., 122).
‘நீராருங் கடலுடுத்த’ என்ற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல், 1970 முதல், அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் துவக்கப் பாடலாக பாட ஆணை பிறப்பிக்கப்பட்டது (பக்., 311).
கடந்த, 1939ல் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட்டம் வந்தது (பக்., 317). இப்படி ஏராளமான செய்திகள், பெரும்பான்மையான வரலாற்றை பதிவு செய்துள்ளதோடு, மாணவர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பயன்படக்கூடிய விபரமான நுால்.
– பின்னலுாரான்