உணவே மருந்து என்ற நிலை மாறி, மருந்தே உணவு என்ற வாழ்வு முறை, முறையற்று போய் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், நம் உடல் நலத்திற்கு உணவு எப்படி உதவுகிறது என்று மருத்துவம் சார்ந்து எழுதியிருக்கிறார், மருத்துவ இதழியலாளர் டாக்டர் கு.கணேசன்.
நோய்கள் அண்டாது நாம் உண்ணும் உணவு, நம்மை எப்படி காக்கும், நோய்கள் ஆட்கொண்டு விட்டால் நோயின் கொடுமையை எப்படி குறைக்கும் என்று இந்த பெரிய புத்தகத்தில் அலசியிருக்கிறார்.
ஐம்பது கட்டுரைகளும் நுாறு ரகம்! மாவு சத்து, புரத சத்து, நார் சத்து உள்ள உணவுகள் எவை; அவை நோய்களை எப்படி விரட்டும் என்று பட்டியலிடுகிறார். பால், பருப்பு, பழங்கள், கிழங்குகள், தானியங்கள் தரும் நன்மையும், தீமையும் திகைக்க வைக்கின்றன.
நாம் யாராக இருந்தாலும், நம்மில் யாருக்கு என்ன நோய் இருந்தாலும் உணவு தேவை என்ன என்பதை இந்த புத்தகத்தில் கண்டறியலாம்.
நுாறு கிராம் காய்கறி, பழத்தில் இருக்கும் கலோரி, புரதம், கொழுப்பு, பிற அமிலங்கள், நீர் சத்து, மாவு சத்து எவ்வளவு என்று மிகப்பெரிய பட்டியலை, நுாலின் கடைசி பக்கங்களில் சேர்த்திருப்பது இன்னும் சிறப்பு.
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம். இந்த புத்தகத்தை படித்து விட்டால், நம் உணவு முறைகளையே மாற்றி விடுவோம்.
-– ஜி.வி.ஆர்.,