கனவுகள், திறமைகள், பண்புகள் என்னும் மூன்று பிரிவுடன், 30 தலைப்புகளில் எழுதப்பட்ட நுால் இது. திருக்குறளின் வைப்பு முறையை மனதில் பதித்து இந்தப் பகுப்பு முறை அமைந்திருப்பது பாராட்டுக்கு உரியது.
லண்டனில் கல்வித் துறையில் உயர் பதவியில் இருக்கும் புதுயுகன், தன் கல்வி அனுபவங்களை அனைவருக்கும் பயன்படும் வகையில் விரிவாகத் தந்துள்ளார்.
ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை கொண்டவன். ஒருவனைப் போல் இன்னொருவன் இல்லை. இன்னொருவன் பெற்ற அனுபவத்தை வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, அவனைப் போல் தன்னை அமைத்துக் கொள்ளக்கூடாது என்பதை மிகவும் துல்லியமாக எடுத்துரைக்கிறது இந்த நுால்.
மனிதனின் வெற்றிக்குப் பின்னால் இருந்து உந்தித் தள்ளுவது நல்ல மனப்பான்மை தான். பக்குவப்பட்ட மனம் இருந்தால், எந்தச் சூழலிலும் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.
கல்வி என்பது கல்விக் கூடத்தில் மட்டும் கிடைப்பதில்லை. கல்விக் கூடத்திற்கு அப்பாலும் இருக்கிறது. கல்விக் கூடத்திற்குச் செல்லாமலே கூட கல்வியாளனாக முடியும் என்னும் உண்மையை இந்த நுால் உரத்தக் கூறுகிறது.
தன்னம்பிக்கை வரிசை நுால்களில் எந்த நுால் போலவும் இல்லாமல், புது வகையாகப் படைக்கப்பட்ட புதுயுகனின் நுால் இது.
– முகிலை இராஜபாண்டியன்