சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. வார்த்தை தவறி விட்டால்... அதன் விளைவுகள் சொல்லொணா துயரம் தருகின்றன. நெல் போட்டால் நெல் விளையும். சொல் போட்டால் சொல் தானே விளைய வேண்டும். மாறாக துன்பம், கோபம், ஆற்றாமை, ஆதங்கத்தை ஏன் அறுவடை செய்ய வேண்டும் என, கேள்வி கேட்கிறார், ஆசிரியர் லட்சுமி ராஜரத்னம்.
நமக்கு பல், உதட்டை கடவுள் ஏன் கொடுத்திருக்கிறார் தெரியுமா என்பது அவரது கேள்வி. ஆனால், ஆசிரியரின் பதில், நாக்கைப் புரட்டும் போது உண்டாகும் சொற்களை, காவல் வீரராக பற்கள் தடுத்து நிறுத்த வேண்டுமாம். அதையும் மீறினால், உதடுகளை இறுகப் பூட்ட வேண்டும் என்கிறார்.
மனதை பாதுகாக்கும் மந்திரத்தையும் அவரே சொல்கிறார். கற்பக மரம் போல மனதிற்கும் கேட்டதை தரும் சக்தி இருக்கிறது. அதனிடம் நல்லதை மட்டும் கேட்க வேண்டும். எதிர்மறை எண்ணத்தை அனுமதிக்கக் கூடாது என்கிறார். மொத்தத்தில் ஒவ்வொருவரும் தன்னை அறிந்து கொள்ளத் துாண்டும் புத்தகம் இது.
– எம்.எம்.ஜெ.,