பேராசிரியப் பெருந்தகை, நற்றமிழ் நாவலர், உரை நயம் கண்ட உரை வேந்தர், சைவ சித்தாந்த செம்மல், கல்வெட்டு, செப்பேடுகளை ஆய்ந்து தமிழக வரலாறு எழுதும் ஆய்வாளர், திருக்குறள், திருவருட்பா ஆய்வுத் திலகம் என்றெல்லாம் போற்றப்படுபவர் தமிழறிஞர் ஔவையார் குப்பம் துறைசாமிப் பிள்ளை.
நுண்மாண் நுழை புலம் கொண்ட இவரது நுால்களை, 70 ஆண்டுகளுக்குப் பின் மீட்டுருவாக்கம் செய்யும், ‘காவ்யா’ முயற்சி, தமிழ் செய்த தவமாகப் போற்றத் தக்க பெருந்தொண்டாகும்.
தமிழ் நாவலர் சரிதை, பரணர், மதுரைக் குமரனார், தெய்வப் புலவர் திருவள்ளுவர், பெருந்தகைப் பெண்டிர் ஆகிய ஐந்து நுால்களும் கட்டுரைக் களஞ்சியம் முதல் தொகுப்பாக வந்துள்ளது. ஆய்வுத் தமிழின் ஆழங்காணும் இந்த ஐந்து நுால்களிலும் தமிழின் மேன்மை, நயங்கள், வரலாறு ஆகியவற்றைக் காணலாம்.
மேலும், ‘12 ஆண்டுகள் மழை பெய்யாது வற்கடம் (பஞ்சம்) வந்து பாண்டிய நாடு வளம் குன்றியது. கடைச் சங்க வரலாறு இதைக் காட்டுகிறது. தலைச் சங்கத்தில், 4,449 புலவர்கள் இருந்து பரிபாடல், முதுகுருகு, முதுநாரை முதலிய பலநுாறு நுால்களை அரங்கேற்றினர். இடைச் சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர் இருந்து இலக்கணம் பாடினர் என்று தமிழ் நாவலர் சரிதையில் தமிழின் முச்சங்கங்களை ஆய்ந்து தெளிந்து எழுதியுள்ளார்.
தெய்வங்கள் பாடிய பாடல்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. முருக வேள், நாமகள், இறையனார் ஆகியோர் தமிழில் பாடியுள்ளனர். திருவாலங்காட்டில் பேயாய் வந்தவர் தன் கணவனைப் பழிவாங்கி கொன்றார்.
வாக்கு தவறாமல், 70 ஊர்த் தலைவர்களும் தீயில் விழுந்து கருகினர். இதைக் கண்டு சேரர், சோழர், பாண்டியர் பாடிய மூன்று வெண்பாக்களும், நிகழ்ந்த வரலாற்றுக்குச் சான்றாக எழுதியுள்ளமை, தமிழனின் பண்பாட்டுப் பதிவாக நிற்கிறது.
பரந்த பண்பும், விரிந்த நோக்கும், தமிழில் ஆழ்ந்த புலமையும் பெற்ற மதுரைக் குமரனார் வரலாறு படிப்பவர் மனதைக் கவர்கிறது.
‘ஊருணி’ என்னும் வட்டார மதுரைச் சொல்லை வைத்து தெய்வப் புலவர் திருவள்ளுவர் தென்மதுரையில் பிறந்தார் என்று நிறுவியுள்ளார். SUN STROKE எனும் நோயை ‘அழல் தெறிப்பு’ என்று மொழிபெயர்த்துள்ளது சிறப்பாக உள்ளது. இவர் மொழியாக்கத்தைப் பின்பற்றியே இவர் திருமகனார் ஔவை நடராசரும் பல மொழி பெயர்ப்புகள் செய்துள்ளார்.
ஐந்து தலை பாம்பு ஆதிசேடன் திருமாலைத் தாங்கியது போல், ஐந்து ஔவை துரைசாமியாரின் உரைவள நுால்கள், தமிழின் பெருமையைத் தாங்கி நிற்கின்றன.