இந்த கட்டுரைத் தொகுதியில், கவிஞர் தன்னைப் பற்றி பேசுகிறார். ஆனால், தன்னை மட்டும் முன் நிறுத்தாது, திரைக்கவி முன்னோடிகள் குறித்து நிறைய பேசுகிறார். பல சம்பவங்கள் குறித்துப் படித்து சிலிர்ப்பு அடைகிறோம்.
ஒரு படத்தில் டைட்டிலில் மருதகாசி, கண்ணதாசன், தஞ்சை ராமையா தாஸ் ஆகியோர் பெயருக்குக் கீழே, உடுமலை நாராயணகவி பெயரைப் போட்டனர். அப்போது ஒரு நண்பர், உடுமலையாரிடம் என்னய்யா, எவ்வளவு பெரிய சீனியர் நீங்கள், உங்களுக்குக் கீழே இவர்கள் பெயரைப் போடாமல், அவர்களுக்குக் கீழே உங்கள் பெயரைப் போட்டிருக்கிறீர்களே என்று வருத்தப்பட்டாராம்.
அதற்கு நாராயண கவி, ‘இவர்களை எல்லாம் தாங்கி நிற்கக்கூடிய ஆற்றல் எனக்குத்தான் இருக்கிறது என்று காட்டுவதற்காகப் போட்டிருக்கின்றனர். அதை விடு’ என்றாராம். என்னே பெருந்தன்மை.
சில அத்தியாயங்களுக்கு இவர் வைத்திருக்கும் தலைப்புகளும் மனதை மயக்குகின்றன. அத்தியாயம் – ௮, எம்.ஜி.ஆர்., கையில் இருந்தது ரேகை அல்ல, ஈகை. கவிஞர் முத்துலிங்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர் எம்.ஜி.ஆர்.,
நன்றிப் பெருக்குடன் அவரைப் பக்கத்துக்குப் பக்கம் நினைவு கூர்ந்து சிலிர்ப்பு அடைகிறார்.
இந்தப் புத்தகம் நம் மனதை இதமாக வருடிச் செல்லும் இளம் தென்றல்.
– எஸ்.குரு