இந்திய சமூகத்தில், ‘வேற்றுமை பார்க்கும் பண்பு’ ஆழமாக வேரூன்றிப் போயுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கொழுந்துவிட்டு எரியும், ‘சாதி’ என்ற தீ, சாதிக்குள் சாதி என்று சல்லி வேர்கள் போல் கிளை பரப்பி, இந்திய மனித சமூகத்தை வதைத்துக் கொண்டிருக்கிறது.
மனிதருக்குள் மனிதரை வேற்றுமை பாராட்டி ஒடுக்கியும் விலக்கியும் வைப்பதற்கு எதிராக எழுத்து, ஆயுதமாக பல காலம் கையாளப்பட்டு வந்துள்ளது.
இந்நுாலை உருவாக்கியுள்ள நுாலாசிரியர் ரேவதி, கறுப்பின எழுத்துகளுக்கும், தமிழ் தலித் எழுத்துகளுமான ஊடாட்டங்களையும், அவ்வெழுத்துகள் துவக்கத்தில் வெளிவந்த முறைகளையும் ஆராய்ந்து விளக்கியுள்ளார்.
போராட்ட உணர்வுகளோடு தம் படைப்புகளைப் படைத்தவர்களாகக் கறுப்பின படைப்பாளி கூகிவா தியாங்கோவையும், தலித் படைப்பாளி ராஜ் கவுதமனையும் அடையாளம் காட்டுகிறார். ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலை வெளிச்சமிட்டுக் காட்டுவதிலும், தலித் பெண்ணிய பார்வையில் தம் படைப்புகளை உருவாக்குவதிலும் டோனி மாரீசனும், தமிழ்ப் படைப்பாளி பாமாவும் இணைவதையும் எடுத்துரைப்பது பாராட்டிற்குரியது.
இந்நுாலை வாசிப்பவர், ஒடுக்கப்பட்டோர் எழுத்து மரபு உருப்பெற்ற வரலாறுகளை உணர்ந்து கொள்வதோடு, இவ்வகை தன்மைகள் கொண்ட இலக்கியங்களுள் உள்ள ஒற்றுமைகளையும், அவை எதிர்நோக்கி நகரும் இலக்குகளையும் புரிந்து செயல்படத் துாண்டும் என்பதில் சந்தேகமில்லை.
– மாசிலா ராஜகுரு