சங்ககாலத் தமிழகத்தை ஆண்டவர்கள், மூன்று பெரும் அரசர்கள் சேர, சோழ, பாண்டியர் எனும் இம் மூவரது நகரங்கள் குறித்த வரலாற்றைப் பேசுகிறது இந்நுால்.
சங்ககாலத் தமிழகத்தின் தலைநகரங்களை, நாட்டகப்பட்டினங்கள், துறைமுகப் பட்டினங்கள் எனப் பகுத்து, அவைபற்றி விரிவாக அலசியுள்ளது இந்நுால். கோவில் அல்லது அரண்மனையை மையமாகக் கொண்டு அகழிகள் போன்றவற்றுடன் விளங்குவன நாட்டகப் பட்டினங்கள்.
இதற்கான இலக்கிய ஆதாரங்களை முன்வைத்து இந்த நகரங்களைப் பற்றி விரிவாக இந்நுால் விரிவாகப் பேசியுள்ளது.
முசிறி, மாந்தை, தொண்டி – சேரர், காவிரிபூம்பட்டினம் – சோழர், கொற்கை, காயல் – பாண்டியர் இவை துறைமுகப்பட்டினங்களாகக் கூறப்பட்டு, தகுந்த சான்றுகளோடு எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.
சங்ககால மக்களிடம் ஊரக வாழ்வு அதிகமாகத் தென்படுகிறதா? நகரிய வாழ்வு அதிகமாகத் தென்படுகிறதா? என்பதை ஆய்ந்து, பெரும்பான்மை ஊரக வாழ்வே சங்க இலக்கியங்களில் பேசப்பட்டுள்ளது.
நகரிய வாழ்வு மிகவும், குறைவாகவே உள்ளது என்பதை இந்நுால் சான்றாதாரங்களோடு விளக்கியுள்ளது.
இவை தவிர, சங்ககால மக்களின் நாகரிகமும் பண்பாடும் என்னும் தலைப்பில், அக்கால மக்களின் பழக்க வழக்கம், நம்பிக்கை, சடங்கு, விழா, பொழுதுபோக்கு, விளையாட்டு முதலான பல கருத்துக்கள் விரிவாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.
இந்நுால் சங்ககாலத்திற்கு அழைத்துச்சென்று, அம்மக்களோடு மக்களாக வாழவைத்து பல அரிய செய்திகளை அள்ளித்தருவதாக இந்நுால் அமைந்துள்ளது. இந்த அரிய நுாலைத் தமிழுலகம் வரவேற்று மகிழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
– இரா.பன்னிருகைவடிவேலன்