ஆசிரியர் மா.கி.இரமணன், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் என்று மிளிர்பவர். ஆம். அதற்கு அவர் எழுதிய கவிதையே சான்று. வாழ்வதற்குப் பொருள் வேண்டும் தான். ஆனாலும் வாழ்வதிலும் பொருள் வேண்டாமா என்ற வரிகள், ஆழ்ந்த சிந்தனையைத் துாண்டும்.
உண்மையான பூங்கொடி மணக்கத்தானே செய்யும் நுாலின் பெயரே, முதல் கட்டுரையின் தலைப்பாக உள்ளது. ஐந்தெழுத்தை நெஞ்சழுத்தி எழுதிய அனைத்துக் கட்டுரைகளும், கன்னித் தமிழின் களி நடனம், சிந்தனை ஊற்றின் சிகரம் எனலாம்.
இந்தக் கட்டுரைகளின் மூலம் ஆசிரியர் தரும் சமுதாய நலன் பாராட்டிற்குரியது. கண் தந்த கண்ணனும், கண்ணப்பனும் என்ற கட்டுரையின் முடிவில், உறுப்புகளில் சிறந்த கண்ணை பிறருக்குக் கொடுத்து உதவும் கண் தானத்தைக் கண்ணப்பரே துவங்கி வைத்தார் என்று
கட்டுரையை முடித்து, முடிவுரையாக, நாம் வாழும் போது ரத்ததானம் செய்வோம்.
வாழ்ந்து முடியும்போது கண் தானம் செய்வோம். நாம் கண் மூடிய பின், நம் கண்கள் உயிருடன் உலகைக் காணட்டும் என்பது உயிர்ப்புள்ளது (பக்., 135) விளக்கமே தனி.
நூல் முழுவதும் சைவமும் வைணவமும் கலந்து அணி செய்கிறது. சிவபெருமான் பொன் தந்தார், பொருள் தந்தார், பொதி சோறு தந்தார், பஞ்சம் தீர்த்தார், பசி போக்கினார். ஓரறிவு முதலாக ஐந்தறிவு வரை உள்ள உயிர்கள் இறைவனை வழிபட்ட வரலாறு இந்த நூலினுள் தொனிக்கிறது.
சமயக் குரவர் நால்வரும், சந்தானக் குரவர் நால்வரும் திருமேனிகளுடன் காட்சிப் படுத்தியிருப்பது அழகினும் அழகு (பக். 159).
ஆசிரியர் வெளியிட்ட நுால்களும், பதிப்பித்த நுால்களுடன் குறுந்தகடு பற்றிய தகவல் உபரிச் செய்தி. வாசகர்களுக்குப் பயன் தரும். இவருடைய சிந்தனைக் கருத்துகளால் மனங்கள், மணம் பெறும் என்பதில் ஐயம் இல்லை.
– பேராசிரியர் இரா.நாராயணன்