ஈழத் தாயகத்தில் பிறந்த அன்பு ஜெயா, மருந்தியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று, மருந்து தயாரிப்பு நிறுவன உயர் பொறுப்புகளில், 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிட்னி பாலர் மலர் தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர், முதல்வர், மக்கள் தொடர்பு அலுவலர் போன்ற பொறுப்புகளில் நற்பணியாற்றியவர். தமிழ்ப் புலமை மிக்க பன்னுால் ஆசிரியர். ஆஸ்திரேலியா கம்பன் கழகம் வழங்கிய தமிழ்ச்சான்றோர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.
பிரமபுரம் சீகாழித் தலத்தையும், பெம்மான் சிவனையும் குறித்த சொற்கள் எனப் பலரும் அறிவர். ஞானசம்பந்தப்பெருமான், 3 வயதில் அம்மையின் அருட்பால் உண்டு, ‘தோடுடைய செவியன்’ எனத் துவங்கிப் பாடிய பாடல், ‘பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே’ என முடியும்.
தேவாரத் திருப்பதிகங்களையும், திருப்புகழ்ப் பாடல்களையும் சீகாழித் தல புராணத்தையும், கல்வெட்டுச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு காழிப்பதியின் சிறப்புகளையும் திருஞானசம்பந்தர் அருள் திறத்தையும் தெளிவாக இந்நுாலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
சீகாழிக்கு, 12 திருப்பெயர்கள் அமைந்தமை போன்று, 12 தலைப்புகளில் சிவநேயச்செல்வர்தம் உளம் உவக்கும் வண்ணம் இனிய தமிழில் நுாலைப் படைத்துள்ளார். பன்னிரண்டு பெயர்களின் காரணங்களையும் அழகுற எழுதியுள்ளார். திருத்தோணியப்பர், சட்டைநாதர் என இரு மூலவர் சன்னதிகள் ஈண்டு அமைந்துள்ளன.
இத்திருத்தலத்தின் விமானம், விண்ணிழி விமானம் என்றும், தேவர்கள் விண்ணிலிருந்து கொண்டு வந்து வைத்தனர் என்றும் சொல்லப்படுகிறது. தீர்த்தம், பிரம தீர்த்தம் எனப்படுகிறது; தீர்த்தங்களும், 12 அமைந்துள்ளன.
மூர்த்தி, தீர்த்தம், தலம் எனும் மூன்றையும் தெளிவாக அறிந்து, வழிபாட்டை நிறைவு செய்ய இந்நுால் மிகவும் உதவும். கணநாத நாயனார் அவதரித்த திருப்பதி அன்றியும், குமரவேள், ஆதிசேடன், காளி, சூரியன், சந்திரன், அக்கினி, வேதவியாசர் உள்ளிட்டோர் பூசித்துப் பேறு பெற்ற திருத்தலம் இது. மூவர் முதலிகள் பாடிய, 71 திருப்பதிகங்களைப் பெற்ற சிறப்புடையதும் ஆகும் இத்தலம். மிகச்சிறந்த வடிவமைப்பு, அழகான அச்சாக்கம், எழில்மிகு வண்ணப்படங்கள், நுாலின் மதிப்பை உயர்த்துகின்றன.
– கவிக்கோ ஞானச்செல்வன்