சொல்லத் தயங்குகிற ஒரு சொல்லாத எய்ட்ஸ் நோய் ஆகிவிட்டது. அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வெளியில் சொல்லாமல் வெட்கப்பட்டு வேதனைத் தீயில் அவதிப்படுபவர்களாகவே உள்ளனர். ஆறுதல் கூற அவர்களுக்கு யாருளர் என்று சொல்லக்கூடிய நிலை தான் உள்ளது. அத்தகைய நோயாளிகள் வாழ்விலிருந்து விலகியே நிற்பது கண்டுணர்ந்து, அவர்களின் அவலத்தை வசன கவிதையாக வடித்துள்ளார் நுாலாசிரியர் ஸ்டீபன்.
நோய் வாய்ப்பட்டவரின் குடும்ப நிலையும், அந்நோய்க்கு ஆளாகி வருந்தும் வருத்தமும், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று சொல்வரே அதை மெய்ப்பிக்கும் வகையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்களை, எய்ட்ஸ் சுனாமியிலிருந்து கவலையோடும், கருணையோடும் கரையேற்ற முயன்றிருக்கிறார் நுாலாசிரியர்.
ஆஷா பவன் என்ற அமைப்பு அப்படிப்பட்டவர்களைக் கருணையோடு கரை சேர்க்க முயல்வதை, ஆசிரியர் மிகுந்த அக்கறையோடு கூறிச் செல்கிறார். அவர்களுக்கான அர்ப்பணிப்பு தான் இந்நுால்.
பன்னிரு தலைப்புகளில் அமைந்துள்ள இந்நுாலின் நோக்கத்தை ஆசிரியர், ‘எய்ட்ஸ் என்னும் காட்டு மிருகம் தின்று தீர்த்து, எச்சமிட்ட மாமிசக் கூடுகளில் சிறைப்பட்ட மனங்களுக்கு ஆறுதல் சொல்வதே’ என்ற தன் பிரகடனத்தை இந்நுாலில் முன் வைத்துள்ளார்.
யாரோ செய்த பாவங்களுக்காகப் பழி சுமக்கும் சுமைதாங்கிகள் என்று உணர்த்தும்போதே ஆசிரியரின் கவலை நெஞ்சம் கசிந்துருகுவதையும், கண்ணீரில் கரைவதையும் காண முடிகிறது.
இந்நுாலில் பாதிக்கப்பட் ஆண், பெண், குழந்தை, அதனால் அல்லல்படும் குடும்பம் என, இரக்கத்தை வரவழைக்கும் விதத்தில் நுால் சொல்கிறது. குடும்பத் தலைவனின் குடிப் பழக்கம், அத்து மீறிய காமம் இவற்றை எதார்த்தமாக சித்தரிக்கிறது. கவித்துவம் நிறைந்த வார்த்தைகளால், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கதையை ஒரு காவியமாக ஆக்கியிருப்பது தமிழுக்குப் புது வரவு.
– ராம.குருநாதன்