தன் கருத்தை மற்றொருவருக்கு நேரிடையாக கூறாமல், வேறொருவர் மூலமாக கூறச் செய்தலே துாது என்று அழைக்கப் பெறும். காடுகளில் சுற்றித் திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சியுற்று குழு வாழ்க்கைக்கு வந்த பின் நாடு, நகர் என பண்பாட்டில் சிறப்புற்ற காலத்தில் துாது என்பது முறைமைப் படுத்தப்பட்டு சிறப்பான நிர்வாக முறையை தமிழக மக்கள் அறிந்திருந்தனர் என்பதற்கு, இலக்கியங்களில் காணக்கிடக்கும் துாது பொருண்மைகளும், துாது இலக்கியங்களும் சான்றாக விளங்குகின்றன.
கோப்பெரும் சோழனிடம் பிசிராந்தையர் அன்னச் சேவலை துாது விடுக்கும் நிகழ்வும், அதியமான் அவ்வையை தொண்டைமானிடம் துாதனுப்பிய நிகழ்வும், தமிழர் தம் பண்பாட்டின் அடையாளமாக புறநானுாற்றில் பேசப்படுகிறது.
காதலுற்ற தலைவன் – தலைவியிடையே நிகழும் மென்மையான காதலுணர்வில் திரையாக விழும் ஊடலை தணிக்க, தோழி, பாங்கள், பாணன், விறலி போன்றோர் துாது செல்பவர்களாக விளங்கி, தங்களின் சொல்லாற்றலால் நனி நாகரிகமாக ஊடலை தணித்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் துணையோடு ஆய்வு செய்துள்ளார் நுாலாசிரியர்.
தன் குடிப்பிறப்பின் மாண்புகளையும், மரபுகளையும் காக்கும் வகையில் தலைவனின் பரத்தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தலைவி உட்படுத்தப்பட்டாள் என்பதும், இக்கால பெண்ணிய சிந்தனையாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
எனினும், அக்கால சமூகக் கட்டமைப்பு அப்படித்தான் இருந்திருக்கிறது என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்.
– புலவர் சு.மதியழகன்