இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, நாணயம், அகழ்வு ஆய்வுகள் கொண்டு ஒரு நாட்டின் வரலாறு எழுதப்படுகிறது. சேரர் வரலாறு பற்றி கே.ஜி.சேஷைய்யர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
தமிழில், பேராசிரியர் அவ்வை சு.துரைசாமி பிள்ளை, சேர நாடு முழுமையும் சுற்றி தொண்டி, வஞ்சி முதலிய வரலாற்று புகழ்மிக்க இடங்களை நேரில் கண்டு ஆய்வு செய்தார். மலைகள், ஆறுகள் முதலியவற்றின் முந்தைய பெயர்களையும், தற்போது வழக்கில் உள்ள பெயர்களையும் ஆய்ந்து இந்த நுாலில் வெளிப்படுத்தியுள்ளார்.
சேர நாட்டின் தொன்மை, சேரர்கள் பரம்பரை பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானை செங்கெழு குட்டுவன், களங்காய்க்கண்ணி நார் முடிச்சேரல், கடல் பிறகோட்டியவன், ஆடுகோட்பாட்டு சேரலாதன், செல்வக் கடுங்கோ, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் ஆகிய, 16 சேரர்களின் வரலாற்றை, பல்வேறு ஆதாரங்களுடன் தெளிவாக எழுதியுள்ளார்.
நெடுஞ்சேரலாதனை கழாஅத் தலையார் மரணிக்கும் தறுவாயில் பாடி, பொன்மாலை பரிசாக பெற்றதையும், அவனுடன் மனைவியர் உடன்கட்டை ஏறியதையும் குறிப்பிட்டுள்ளார். பெருஞ்சேரலாதன் மார்பில் பாய்ந்த அம்பு முதுகில் புண் செய்ததால், வெண்ணி எனும் ஊரில் வடக்கிருந்து உயிர் துறந்ததை, புறநானுாற்றின் பாடலால் அறிய வைக்கிறார்.
வீரமும், கொடையும் மிகுந்த சேரரின் வரலாற்றை தெளிவாக அறிவிக்கும் சிறந்த நுாலிது.
– முனைவர்.மா.கி.ரமணன்