காலங்கள் கடந்து போயினும் பாரதியார் பாடல்களின் வாசம் உலகெங்கும் வானளாவி நித்தியமாய்க் கமழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்திய விடுதலைப் போராட்டக் கொந்தளிப்புகளின்போது சற்றும் அஞ்சாமல் வீரியமாகப் பாடி, பாமரர்களைத் தட்டியெழுப்பி மக்கள் மனதில் அழியாத தடம் பதித்த மகாகவியை, உலக வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டது.
விழித் தீப்பந்தங்களோடு விடுதலைக்குப்பாடிய பாரதியின் வரலாற்றை, இக்கால இந்தியக் குடிமக்கள் அனைவரும் அறிய வேண்டும்.
பாரதியின் இளமைப்பருவம், தமிழ்ப்பற்று, தேசப்பற்று, அறிவார்ந்த புலமைத்திறம், விடுதலை வேட்கை, நகைச்சுவைக் கவியரங்க நிகழ்வுகள், நுண்ணறிவு உரையாடல்கள், பெண் விடுதலை விழைவு, சமத்துவச் சிந்தனைகள், பாட்டு வகைகள், அரிய வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தையும் உள்ளடக்கி மிளிரும் கருத்துக்கருவூலம் இந்நுால்.
வழமையான வடிவில் வரும் வாழ்க்கை வரலாற்று நுால்களைப்போல் அன்றி பெரும்பான்மையினரையும் ஈர்க்கும் வகையில் பாரதியைப் பற்றிய, 100 கேள்விகளுக்குத் தெளிவான, சுவையான விடைகளாக புதிய உத்தியோடு வடிவமைத்த்துச் சுவைபட வழங்கியிருக்கிறார், நுாலாசிரியரும், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநருமான ஒளவை அருள்.
‘பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமையில்லை. இறவாப் புகழுடைய நுால்களைத் தமிழ்ப் புலவர்கள் இயற்ற வேண்டும்.
அயல் நாட்டார் அவற்றை வணக்கம் செய்தல் வேண்டும்’ என்று அன்றே சொன்ன தீர்க்கதரிசியான பாரதியார் வரலாறு முழுவதையும் செழுமையாகத் தொகுத்துத் தந்திருப்பது பாராட்டுக்குரியது. அவை, நுாலின் மதிப்பைக் கூட்டுகிறது.
பாரதி – காந்தி சந்திப்பு, பாரதி – நிவேதிதா சந்திப்பு, பாரதியைப் பற்றிய கல்கி, ராஜாஜி, வையாபுரிப்பிள்ளை, அறிஞர் வெ.சாமிநாத சர்மா ஆகியோரது கருத்துக்கள் என எதுவும் விடுபடாமல் நுாலில் இடம் பெற்று உள்ளன.
– மெய்ஞானி பிரபாகரபாபு