சிறுகதைகள் வரலாற்றில், ‘1951 – 1952’ காலப் பகுதியில் நிகழ்ந்த நிகழ்வுகளை அறிய துணை செய்கிறது இந்நுால். குறிப்பாக, இக்கால இடைவெளியில் பிரசண்ட விகடன் என்னும் இதழில் வெளியான சிறுகதைகள் குறித்த நுாலாக இது விளங்குகிறது.
நாரண.துரைக்கண்ணன் என்னும் புதின ஆசிரியரை, சிறுகதை ஆசிரியரை, -இதழ் ஆசிரியர் அறிந்துகொள்ளும் நிலை இந்நுாலில் வாய்க்கிறது.
மேலும், 19ம் நுாற்றாண்டின் இடைக்காலம் துவங்கி, 20ம் நுாற்றாண்டின் இடைக்காலம் வரை, தமிழ்ச் சூழலில் செயல்பட்ட அரசியல் கருத்து நிலைகள்; அக்கருத்து நிலை சார்ந்து செயல்பட்ட மனிதர்கள்; அவர்கள் தங்கள் கருத்து நிலைகளை வெளிப்படுத்த பயன்படுத்திய ஊடகங்கள்; குறிப்பாக அச்சு ஊடகம் ஆகியவை, ஒன்றுடன் ஒன்று ஊடாடி உறவு கொள்ளும் தன்மை மிக்கவை.
தமிழ் இதழியல் துறையில், 1920 – 1965 காலங்களில் தொடர்ச்சியாகச் செயல்பட்டவர். 20ம் நுாற்றாண்டின் துவக்க காலம் முதல், ஏறக்குறைய அந்த நுாற்றாண்டின் இறுதிக்காலம் வரை செயல்பட்ட அரிய மனிதர்களில் ஒருவர் நாராயணசாமி துரைக்கண்ணான நாரண.துரைக்கண்ணன் (1926 – 1996) ஆவார். புனைகதை உருவாக்கத்தில் நாரண.துரைக்கண்ணனின் பங்கு அளப்பரியது.
பிரசண்ட விகடன் என்னும் இதழ் மாதம் இரு முறை வெளியானதையும், அது கலை, இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளதையும், அக்காலகட்டத்தில் இருந்த சிறுகதை எழுத்தாளர்கள் குறித்தும், அச்சிறுகதைகளின் பாடுபொருள் குறித்தும், சிறுகதை அமைப்பு குறித்தும் இந்நுால் விரிவாகப் பேசுகிறது.
விடுதலைக்குப் பின்னான இக்காலகட்டத்தில் சிறுகதைகளின் பாடுபொருள் என்ன? அன்றைய சமுதாய நிலை எப்படியிருந்தது? என்ற பல வினாக்களுக்கு விடையளிக்கிறது இந்நுால்.
ஒரு குறிப்பிட்ட காலகட்ட சமுதாய நிலையை, இலக்கிய வகைமையின் நிலையை அறியத் துணை செய்யும் இத்தகைய நூல்கள், தமிழ் இலக்கிய உலகில் வரவேற்கத்தக்கன.
பழைமைகளை உள்ளடக்கிப் புதுமைகளை வரவேற்கும் தமிழ் அன்னை, இத்தகைய வரலாற்றுப் பொக்கிஷங்களையும் அன்போடு அரவணைப்பாள் என்பதில் ஐயமில்லை.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்