கடைச்சங்க காலத்திற்கு பின் துவங்கி, கி.பி., 17ம் நுாற்றாண்டின் துவக்கம் வரையில், பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த, மன்னர்களின் வரலாற்றை, இந்நுால் கூறுகிறது. கல்வெட்டு, செப்பேடுகள் ஆதாரத் துணையோடு எழுதப்பட்டிருக்கிறது.
கடைச்சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்கள் முதல், பிற்கால பாண்டியர்கள் வரை, ஆண்டுவாரியாக இந்நுால் விளக்குகிறது. மன்னர்கள் பற்றி மட்டுமல்லாது, போர், நில அளவு, நாணயங்கள், கிராம சபை, ஆவணக்களரி, வாணிகம் என, பாண்டியர்கள் ஆட்சி பற்றிய, அனைத்து தகவல்களும் இடம்பெற்று உள்ளன.
பாண்டியர்கள், துறைத் தலைவர்களாக, அமைச்சர், படைத்தலைவர், அரையர், நாடுவகை செய்வோர், வரியிலார், புரவுவரி திணைக்களத்தார், திருமுகம் எழுதுபவர் என, பிரித்திருந்தனர். முத்துக்குளித்தல், சங்கறுத்து வளையல் செய்தல், உப்பு விளைவித்தல், நுால் நுாற்றல் உள்ளிட்ட தொழில்கள், பாண்டிய நாட்டில் செழிப்புற்று இருந்தன.
தமிழகத்தின் தென் பகுதியை, 17ம் நுாற்றாண்டு பிற்பகுதி வரை, ஆட்சி புரிந்துவந்த பாண்டியர்கள், அதன்பின் நாட்டை இழந்து, சீர்குலைந்ததற்கு, காலமே காரணம் என்கிறார், ஆசிரியர். கல்வெட்டு, பாடல்கள், செப்பேடு என, ஆதார துணையுடன் எழுதப்பட்டுள்ள, இந்நுால் பாராட்டுதலுக்கு உரியது.
பாண்டியருடைய வரலாற்றை, முழுமையாக அறிய, இந்நுால் பயன்படும்.