‘கயமை’ என்ற கட்டுரையில், ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று சீறுகிறார். ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். அவர் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தபோது, இவர் மட்டுமே பெண் என்பதால், உடன் படிக்கும் ஆண் மாணவர்களின் கவனம் கலையும்; மனம் கெட்டு விடும். அதனால், முத்துலட்சுமியை கல்லுாரியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று மாணவர்களின் பெற்றோர் மனு கொடுத்து இருக்கின்றனர்.
அப்போது டீனாக இருந்த ஐரோப்பியர், ‘கவனம் கலைகிற மாணவர்கள் வீட்டில் இருக்கட்டும். இந்த மாணவி ஒருவர் படித்தால் போதும் என்று சொல்லியிருக்கிறார்’ என்று பாரதி பாஸ்கர் பதிவு செய்வதைப் படிக்கும்போது நம் கண்கள் கசிகின்றன.
தேசப் பிரிவினையின்போது கொல்லப்பட்டவர்களை விட, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது புள்ளி விபரம்.
ஓட்டலில், தியேட்டரில், பஸ், ரயில் பயணத்தில், அலுவலக லிப்டில், கூட்டமான கடையில்... சற்றும் எதிர்பாராத நேரத்தில் மேலே ஊறும் ஆண் விரல்கள், காதில் மோதும் ஆபாச, ‘கமென்ட்டுகள்’ – வெளிப்படையான, ‘அழைப்புகள்’ இவற்றைச் சந்திக்காத பெண் இருக்க முடியுமா என்ன? பெரும்பாலும், பாலியல் சீண்டல்களை தைரியமாக எதிர்த்து நிற்பதற்குப் பெண் தயாராக இருப்பதில்லை என்பதே உண்மை என்று பெண் புலி பாரதி பாஸ்கர் சீறுகிறார்.
இந்தப் பெண் புலியின் சீற்றங்கள் தரும் சமுதாய மாற்றங்கள்! கக்கும் எரிமலை போன்ற கட்டுரைகளின் தொகுப்பு!
– எஸ்.குரு