உலகம் முழுவதையும் ஒரே ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் எனும் ஒற்றை லட்சியத்தின் கீழ், 1776ம் ஆண்டு துவங்கப்பட்டு, உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களால் ரகசியமாகச் செயல்படுத்தப்படுவதாகக் கருதப்படும், ‘இல்லுமினாட்டி’ அமைப்பு பற்றிய விரிவான நுால். இல்லுமினாட்டி என்றால், ‘தெளிவூட்டுபவர்’ எனும் பொருள்.
உலக வங்கி மற்றும் ராணுவத் தலைமையகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், உலகின் மக்கள் தொகையைக் குறைப்பதும், பஞ்சம், பட்டினி, வறுமை, யுத்தம், வியாதிகள் மூலமாக பேரழிவுகளை ஏற்படுத்துவது போன்றவையும் இல்லுமினாட்டியின் திட்டம் என்பது அதிர்வை ஏற்படுத்துகிறது.
உலகளவில் பல அரசுகளையும், பெரு நிறுவனங்களையும் தன் பிடிக்குள் வைத்து, திட்டத்தை தொடர்வதற்காக, உலகின் முக்கிய, 13 பெருவணிக நிறுவனங்கள் இதற்கென இயங்குவதாகக் கூறி, பல்வேறு உலக சம்பவங்களின் பின்னணியில் இல்லுமினாட்டி இருப்பதாக சான்றுகளைச் சுட்டி விளக்குகிறார் ஆசிரியர் குன்றில் குமார். இதனால், 13 என்ற எண் ஏன் வெறுக்கப்படுகிறது என்பதையும் நுாலில் காணலாம்.
பின்னர் மாறுபட்ட வடிவில் அதே நைட்ஸ் டெம்ப்ளர் சித்தாந்தங்களோடு, கி.பி., 1717ம் ஆண்டு இங்கிலாந்தில் கட்டடக்கலை நிபுணர்களால் துவங்கப்பட்ட அமைப்பே ப்ரீமேசன். ப்ரீமேசன் உறுப்பினர்கள் இல்லுமினாட்டிகள் என்றே அழைக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஒழுக்கம் மற்றும் ஆன்மிகம் சார்ந்தவற்றைப் பற்றிய பிரசாரத்தை மேற்கொள்வதாகக் கூறப்பட்டு, தற்போது நான்கு மில்லியன் உறுப்பினர்கள் கொண்ட ப்ரீமேசன் அமைப்பாக மாறி காட்சி அளிக்கிறது.
மேலும், உலக வரலாற்று நிகழ்வின் ஒவ்வொரு நகர்வும் இந்த அமைப்பு முன்னதாகவே கணித்ததே எனக் கூறப்படுகிறது. நுாலின் உள்ளடக்கமாக உள்ள சுவாரசியமான சான்றுகள் அடங்கிய தகவல்களுக்காகப் படிக்கலாம்.
– மெய்ஞானி பிரபாகரபாபு