உலகில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கின்றனர். ஆனால், மக்கள் மனதில் நிலைத்திருக்கும் சாதனையாளராகத் திகழ்பவர்கள் ஒரு சிலரே. அந்தச் சாதனையாளர்களைப் பற்றிய தொகுப்பே இந்நுால்.
சாதனையாளர்களை துறை அடிப்படையில், அறிவியல், சட்டம், இயல், இசை, நாடகம், வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள், புரட்சியாளர்கள், நீச்சல், மனிதாபிமானம், சிந்தனையாளர் எனப் பகுத்து எளிமையாகவும், அழகாகவும், அவர்களின் சாதனைகளை எடுத்துரைக்கிறது இந்நுால்.
ஒரு சிறந்த விஞ்ஞானியாகவும், தலைவராகவும் திகழ்ந்த அப்துல் கலாமில் துவங்கி, கிரேக்க நாட்டு பிளேட்டோவில் முடிகிறது இந்நுால். சோனி நிறுவனம் உருவான கதை, இயந்திர உலகில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய ஹென்றி போர்டு, வானத்தைப் பார்த்து ஆராய்ச்சி செய்த நிகோலஸ் கோபர்னிகஸ் போன்றோரது வரலாறு படிக்கப் படிக்க சுவை தருகிறது.
இசை உலகில் கர்நாடக இசையைப் பரப்பிய புகழுக்குரிய எம்.எஸ்.சுப்புலட்சுமி, மரணமில்லாக் கவிஞர் கண்ணதாசன் என இந்திய மேதைகள் மட்டுமன்றி, கலைத் துறையில் சிறந்து விளங்கிய மைக்கேல் ஆஞ்சலோ போன்றோரது வரலாற்றையும் அறிந்து கொள்ள இந்நுால் துணையாகிறது. இதைத் தமிழுலகம் போற்றி வரவேற்கும் என்பதில் ஐயமில்லை.
– முனைவர் கி. துர்காதேவி