தற்போது துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருக்குருகூரில் தோன்றியவர் நம்மாழ்வார் என்னும் மாறன். இவரது காலத்திற்குப் பின், இந்த ஊர் ஆழ்வார்திருநகரி எனப் போற்றப்படுகிறது.
குறுநில மன்னனான காரிக்கு மகனாகப் பிறந்தும், அரச வாழ்க்கையைத் துறந்து, திருக்குருகூரில் உள்ள ஆதிநாதர் கோவிலில் நிற்கும் புளிய மரத்தடியில் தவ வாழ்க்கை மேற்கொண்டார்.
யாரிடமும் பேசாமலும், எந்தச் செயலிலும் ஈடுபடாமலும் இருந்த நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரைப் பார்த்ததும் அசைந்து கொடுத்து அவரது கேள்விக்குத் தத்துவ விளக்கமாகப் பதில் வழங்கினார். ஜாதி வருணத்திற்கு உட்படாமல் மதுரகவி ஆழ்வாரும் தன்னை நம்மாழ்வாரின் சீடராக்கிக் கொண்டார்.
‘திருவாசிரியம், திருவிருத்தம், திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி’ என்னும் நான்கு நுால்களைப் படைத்து, ஆழ்வார் பன்னிருவரையும் உள்ளடக்கியவராக விளங்கியவர் நம்மாழ்வார்.
நம்மாழ்வார் வரலாற்றில் இதுவரை வெளிப்படாத பல செய்திகளை விரிவாக ஆராய்ந்து, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தந்துள்ளார் நுாலாசிரியர். நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாற்றை மிக எளிய தமிழ் நடையில் தெளிவாக கண்டு மகிழலாம்.