முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரைப் பற்றி, இதற்கு முன் பல புத்தகங்கள் வெளி வந்துள்ளன. இந்த நுால், அவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டது. இதுவரை சொல்லப்படாத பல புதிய தகவல்களும், இதுவரை பார்த்திராத புகைப்படங்களும் இதில் உள்ளன.
எம்.ஜி.ஆரின் அழகிய புகைப்படங்கள், அவர் நடித்த திரைப்படங்களை பற்றிய தகவல்கள், அந்த படங்களின் சிறப்பம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
எம்.ஜி.ஆர்., நடித்து, வெளியாகாத படங்களின் பட்டியலும், இதில் தொகுக்கப்பட்டுள்ளது. ‘மனித நேயர், மக்கள் திலகம் ஒரு தமிழரே’ என்ற தலைப்பில், நுாலாசிரியர் கூறியுள்ள வரலாற்று ஆய்வு தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது.
‘பத்திரிகையாளர் சோ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசியல் தொடர்பான ஆலோசனைகளை தெரிவித்தவர். அவரது நெருங்கிய நண்பர்’ என, பொதுவெளியில் கூறப்படுவது உண்டு.
ஆனால், எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தபோது, சோ, ஜானகி அம்மையாருக்கு ஆதரவாக செயல்பட்டதாக, இந்த நுாலில் கூறப்பட்டுள்ள தகவலும் ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த நுால், எம்.ஜி.ஆர்., ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கும்.
– சி.எஸ்.,