திருக்குறள் எழுதப்பட்டு 2,050 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, திருக்குறள் தொடர்பான கருத்துக்களையும், திருக்குறள் உரை நுால்களை யும், திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகளையும் விளக்குவது இந்த நுால்.
முப்பத்து நான்கு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள முன்னுரை, இந்த நுாலின் தோற்றம் குறித்தும், தமிழ் மொழியின் பழமை குறித்தும், அந்தக் காலத்தில் இருந்த மொழிகள் குறித்தும் எடுத்துரைக்கிறது.
பொழிலனின் பொறுப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நுால், திருக்குறள் தொடர்பான களஞ்சியமாக விளங்குகிறது.
கடந்த, 1921ம் ஆண்டில், சென்னை பச்சையப்பன் கல்லுாரியில், மறைமலையடிகள் தலைமையில், அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஆய்வு செய்து, திருவள்ளுவர் தோன்றிய ஆண்டு, கி.மு., 31 எனக் கண்டறிந்தனர்.
கி.பி., முதல், இரண்டாம் நுாற்றாண்டு இலக்கியங்களில் திருக்குறள் கருத்துக்கள் முதலானவை இடம் பெற்றிருப்பதை, திருக்குறள் வரலாற்றுக் குறிப்புகள் எனும் தலைப்பில் தெளிவுபடுத்தியுள்ளது இந்த நுால்.
ராயல் அளவு எனும் புத்தக அளவில் அமைந்துள்ள இந்த நுாலின் அச்சு அமைப்பும், வடிவமைப்பும் புத்தகத்தை எடுத்தவுடன் படிக்கச் சொல்லும் அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளன.
– முகிலை ராசபாண்டியன்