அபிராபி அந்தாதியில் முதல், 25 பாடல்களுக்கு எழில் உதயம் எனும் பெயரில் கட்டுரைகளை எழுதிக் கொடுத்து நுாலாக வெளியிட்ட நுாலாசிரியர், ‘சங்கரகிருபா’ என்ற மாத இதழில், 26 முதல், 50 வரையிலான பாடல்களுக்கு விளக்கக் கட்டுரைகளை எழுதி, ‘மாலை பூண்ட மலர்’ என்ற பெயரில் இரண்டாம் தொகுதியை, 1970களில் வெளியிட்டுள்ளனர். அத்தொகுப்பே தற்போது மறு அச்சு வடிவம் பெற்றுள்ளது.
‘ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்’
இவ்வாறு மும்மூர்த்திகளும் புகழும் பெருமாட்டிக்குப்புகழ் மாலை (பக்., 14) சூட்டியுள்ள அபிராம பட்டரின் திறனை வியந்துள்ள ஆசிரியர், ‘அறிவு வைரம் போன்றது. வைரம் இருளில் ஒளிவிடாது – ஒளியில் மிகச் சிறந்து ஒளிரும்’ என்று (பக்., 33) விளக்கியிருப்பதைக் காணலாம்,
புரத்தை, புரம் என்பதன் ஆடியாகப் பிறந்த பெண் பாற் பெயர்; புரம் என்பது அம்பிகைக்கு உரிய திரிபுரங்கள் என்று பொருள் கூறியிருப்பதும், அர்த்தநாரீசத் திருக்கோலமே முதன்முதலாக இறைவன் சகுண மூர்த்தியாக தோன்றிய வடிவமாதலின் இதைத்தொன்மைக் கோலம் என மாணிக்கவாசகர் கூறுவார் (பக்., 43) என்றும் விளக்குகிறார்.
இப்படியாக பல்வேறு விளக்கங்களை கொண்ட கி.வா.ஜ.,வின் இலக்கியத் திறனுக்காகவே இந்நுாலை படித்து பயன் பெறலாம்.
– பின்னலுாரான்