துக்ளக் பத்திரிகையும், அரசியலும் இரண்டற கலந்தவை. இதன் ஆசிரியர், மறைந்த சோ பார்வையில் அலசப்பட்டு, அந்தந்த காலகட்டங்களில் ெவளியான கட்டுரைகள், செய்திகள், கார்ட்டூன்கள், கேள்வி – பதில்கள் போன்றவற்றின் குவியல் தான் இந்த புத்தகம்.
இந்த புத்தகத்தை முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டை வரை, சில மணி நேரங்கள் புரட்டிப் பார்த்தால், இந்திய அரசியல் மட்டுமின்றி, தமிழக அரசியலையும் தளபாடமாக அறிந்து கொள்ளலாம். அப்போதைய அரசியல் தலைவர்களின் பேச்சுகளை, இந்த நுாலில் இப்போது படிக்கும் போது, அவர்களின், அவர்கள் சார்ந்துள்ள கட்சியில் மாறுபாடான நிலைப்பாட்டை நன்கு அறிந்து கொள்ள முடிகிறது.
துக்ளக்கின் விசேஷமான, கேள்வி – பதில்களில், முக்கியமான, 100க்கும் மேற்பட்ட கேள்விகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்தாலே, அந்த கால அரசியலும், இப்போதைய நிலையும் மாறுபாடாக விளங்குவதை அறிய முடியும்.
அரசியல் தலைவர்களை கிண்டல் செய்து, துக்ளக்கில் வெளியான கார்ட்டூன்களை, இப்போது பார்க்க ரொம்ப சுவையாக உள்ளது. நீண்ட காலமாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருக்கும் உதவி ஆசிரியர்கள், தங்கள் ஆசிரியர் சோ பற்றி குறிப்பிடும் பகுதி, மிகவும் அலாதியானது.
அரசியல் பற்றி ஆர்வம் உள்ளவர்கள்; அந்த கால அரசியலை கொஞ்சம் கூடுதலாக தெரிந்து கொள்ள விரும்புவோர், இந்த நுாலை கட்டாயம், கவனமாக படிக்க வேண்டியது அவசியம்.
– சி.எஸ்.,