ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை என்று அறிஞர்கள் கருதுவனவற்றுள் அந்நாட்டின் சரித்திர நுால் சிறந்ததொன்றாம்.
முன்னோர் ஒழுகிக் காட்டிய உயர்ந்த நெறிகளையும் அன்னார் கொண்டிருந்த சிறந்த பண்பினையும், பின்னோர்க்கு நினைப்பூட்டி அவர்களை நல்வழிப்படுத்துவன நாட்டின் பழைய சரிதங்களே என்லாம் என்று தன் முன்னுரையில் கூறுகிறார் சதாசிவ பண்டாரத்தார்.
சோழன் விசயாலயன், முதல் ஆதித்த சோழன், முதல் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், அரிஞ்சய சோழன், சுந்தர சோழன், உத்தம சோழன், முதல் ராசராச சோழன், முதல் ராஜேந்திர சோழன் முதல் ராசாதிராச சோழன், இரண்டாம் ராசேந்திர சோழன், வீர ராசேந்திர சோழன், அதிராசேந்திர சோழன், முதலான சோழ மன்னர்கள் குறித்த அருமையான தகவல்கள் இந்நுாலில் காணப்படுகின்றன.
சோழ மன்னர்களைப் பற்றிய பழைய பாடல்களையும் பிற் சேர்க்கையாக இணைத்துள்ளார். காவிரி நாடு எனவும், பொன்னி நாடு எனவும் அறிஞர்களால் பாராட்டப்பட்ட நாடு.
பண்டைத் திருக்கோவில்களில் காணப்படும் கல்வெட்டுகளும், கொடைத் திறங்களைக் கூறும் செப்பேடுகளும், வழங்கிய நாணயங்களும், பண்டைத் தமிழ் நுால்களும் இந்த நுாலாசிரியருக்கு உறு துணையாக இருந்து இந்நுாலை எழுத உதவியிருக்கின்றன.
– எஸ்.குரு