மலையாளக் கவிஞர் எம்.என்.பாலுார் எழுதியுள்ள தன் வரலாற்றை அதன் சுவை கெடாமல் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் பேராசிரியர் த.விஷ்ணு குமாரன். மலையாளம், ஜெர்மன், ஆங்கிலம் முதலான மொழிகளை நன்கு அறிந்த தமிழ்ப் பேராசிரியர் என்பதால், மொழிபெயர்ப்புஉலகில் குறிப்பிடத்தக்க இடத்தை இவர் பெற்று உள்ளார்.
மலையாளத்தில் வீட்டை, ‘மனை’ என சொல்வது வழக்கம். மனை என்றால் நாம் கட்டுவது போன்ற அடுக்குமாடி வீட்டையோ அல்லது நான்கு பக்கமும் நடமாடுவதற்கு இடமில்லாமல் கட்டப்படும் வீட்டையோ குறிக்காது. நான்கு பக்கமும் தோப்பு அமைந்திருக்க, அதற்கு நடுவே நடுநாயகமாக நிமிர்ந்து நிற்கும் வீட்டைத் தான் இந்த மனை எனும் சொல் குறிக்கும்.
அத்தகைய பாலுார் மனை எனும் வீட்டில் செம்மாந்து வாழ்ந்த பாலுார் எனும் இந்த கவிஞர் அனைத்தையும் இழந்து, மும்பைக்கு சென்று ஓட்டுனராக பணியாற்றியது முதலான வாழ்க்கை செய்திகளை தெளிவாக தமிழ் வாசகர்களுக்கு தெரிவிக்கிறது இந்த நுால்.
கேரள நம்பூதிரிகளின் வாழ்வியலையும், கதகளி எனும் கலைப்பயிற்சி பெறும் தன்மையையும் இந்த நுாலில் பாலுாரார் மிகவும் எளிமையாக தமிழில் விளக்கிச் சொல்கிறார்.