பொற்கால சங்கத் தமிழ் எழுச்சியும், தற்கால சமுதாய வீழ்ச்சியும், எதிர்கால சீர்திருத்த முயற்சியும் கொண்டு தொண்டாற்றும் பேச்சாளர், எழுத்தாளர் பேராசிரியர் தி.இராசகோபாலன். இவரது சிறகடித்த சிந்தனைப் பறவைகள் தடம் பதித்த இதழ்களின் கட்டுரைகள் இந்நுாலில் வலம் வருகின்றன.
மாலனின் அணிந்துரை மந்திரச் சாவியாய் நம் மனங்களைத் திறந்து ஆர்வமாய் படிக்க அழைத்துச் செல்கிறது. வாக்களாரின் கடமைகள், பேரிடர் மேலாண்மை, சித்தர்கள், திருமழிசை ஆழ்வார், கபீர்தாசர், அத்திகரி வரதர், பசவேசர், குல்தீப் நய்யார், வீரசாவர்க்கர், மரணத்தை வென்ற மகா கவிஞன் கண்ணதாசன் போன்ற இந்நுாலில் இடம்பெற்ற, 33 கட்டுரைகளும், அறியாத பல செய்திகளை நமக்கு அள்ளித் தருகின்றன.
அதிகார வர்க்கம் கறைபடிந்து நிற்பதற்கும், நீதித்துறை உள்ளே ஊசிப் போனதற்கும், ஆளும் வர்க்கம் கோட்டை கட்டி வாழ்வதற்கும் காரணம், ஆணிவேரான வாக்காளன் சுயநலக் காரணமாக, பேராசை காரணமாக மாறிப் போனது தான். வாக்காளன் ஆகிய ஆணிவேர் அழுகிப் போய்விட்டதென, ‘இன்றைய அரசியலை’ மதிப்பிடுவது மிக அருமை.
வங்கத்தின் தங்க மகன் அசோக் மித்ரா பற்றிய அறிமுகம் புதிய வெளிச்சம் தருகிறது. சிந்தனை நெருப்பும், சீர்திருத்த மருந்தும், இலக்கிய விருந்துமாக மனவெளிப் பறவைகள் மனதில் நிரந்தரமாக கூடுகட்டி விடுகின்றன.
– முனைவர் மா.கி.இரமணன்