கலைமாமணி அறிஞர் அ.மருதகாசி திரைக்கதைப் பாடல்களில் முத்திரை பதித்தவர். அவரைப்பற்றிய இந்த நுாலை வானொலி அண்ணா ஞானப்பிரகாசம், நுாற்றாண்டு விழாவைக் கருதி படைத்திருக்கிறார். அவர் எழுதிய எளிய தத்துவப்பாடல்கள் காலத்தில் நின்று நிற்பவை. மொழி அறிவும் இசை அறிவும் கொண்ட அவர், ‘மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் முதன்மையானவர்’ என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.
‘கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்... அறிவை நம்பு உள்ளம் தெளிவாகும்’ என்ற பாடல் நினைத்ததை முடிப்பவன் படத்திற்கு அவர் எழுதிய வைரவரிகள். நீலமலைத் திருடன் படத்தில், 1957ம் ஆண்டில் பெண்களுக்கு பெருமை சேர்க்க அவர் எழுதிய பாடலில், ‘கொஞ்சும் மொழிப் பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேணுமடி; வஞ்சகரை எதிர்த்திடவே வாளுமேந்த வேணுமடி’ என்ற கருத்து இன்றைய நவீனகாலப் பெண் சமுதாயம் நிச்சயம் அறிய வேண்டிய கருத்தாகும்.
எம்.ஜி.ஆர்.படங்களில், அலிபாபாவும் 40 திருடர்களும், மாடப்புறா என, 9 படங்களில் இவரது பாடல்கள் உள்ளன. தசாவதாரம் என்ற படத்தில் இவர் எழுதிய பாடல்களை திருமுருக கிருபானந்த வாரியார் பாராட்டி உள்ளார்.
அன்றையத் தலைமுறையின் சினிமாப் பாடல்களை ஆசிரியர், சினிமா குறித்த பத்துக்கும் மேற்பட்ட நுால்களை ஆய்வு செய்து எழுதியிருப்பது, இந்த நுாலின் சிறப்பு அதிகரிக்க உதவியிருக்கிறது. சினிமாவை நேசிக்கும் அனைவரும், நிச்சயம் படிக்க வேண்டிய நுால்.